மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 18 ஆயிரத்து 115 மாணவ, மாணவிகள் மாநில அரசுகளின் கீழ் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (அரசு ஒதுக்கீடு) இடங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரம் நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த 15 சதவீத இடங்களில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதுபோல் 2014-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு கடந்த மே 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 929 தேர்வு மையங்களில் இத் தேர்வு நடத்தப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்து 23 ஆயிரத்து 701 பேர் தேர்வை எழுதினர். இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூன் 7) வெளியிடப்பட்டன. இதில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் மாநில அரசுகளின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு 18 ஆயிரத்து 115 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 716 பேர் மாணவர்கள்; 8 ஆயிரத்து 399 பேர் மாணவிகள்; தேர்வு முடிவுகள், தரவரிசைப் பட்டியல் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்துக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் www.aipmt.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment