தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சில ஆண்டுகளில் ஏராளமான பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர்களும் கல்வியாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.அனைவரும் கல்வி பெற வேண்டும் என்ற உயர் நோக்கில், தமிழகத்தில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்குள் அரசு, தொடக்கப் பள்ளிகளை அரசு ஏற்படுத்தி, சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களை நியமித்துள்ளது. மாணவர்களும் பெற்றோரும் சிரமம் இல்லாமல் கல்வி கற்க அனைத்துவிதமான உதவிகளையும், ஊக்குவிப்புகளையும் அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
தற்போது அரசும், ஆசிரியர்களும் இதுபோன்ற பள்ளிகளில் எதிர்நோக்கியுள்ள மாபெரும் சவால் மாணவர் சேர்க்கை இல்லாமை. கிராமப்புற பெற்றோர்களிடம் தங்களது பிள்ளைகள் உள்ளூர் பள்ளியில் படித்தால் மதிப்பு இல்லை என்ற ஒரு தவறான எண்ணம். இதனை அரசு உதவி பெறும் பள்ளிகளி பயன்படுத்திக் கொண்டுள்ளன.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் அரசுதான் ஊதியம் வழங்கி வருகிறது. ஆசிரியர் நியமனம் அந்தந்த நிர்வாகமே. எனவே பல நிர்வாகங்கள், பல லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஆசிரியர்களை நியமிக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் பணம் கொடுத்து வேலைக்கு வந்த ஆசிரியர்களை, கல்வித்துறை வேறு தேவையுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செல்லும் ஆசிரியர்களை அந்த நிர்வாகம் பணம் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது போன்ற பல்வேறு பிரச்னைகள். பணியிடம் போய்விட்டால், நிர்வாகம் அடுத்து அந்த இடத்தை நிரப்ப இயலாது. அவர்களது வருமானம் பாதிக்கப்படும்.இதற்காக மாணவர்கள் சேர்க்கையை ஆண்டுதோறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தக்க வைத்துக் கொள்ளவும், ஊராட்சி ஒன்றிய நகராட்சி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை நயம்காட்டி பிடித்துச் செல்வதற்கும் பல்வேறு யுக்திகளை மேற்கொள்கின்றன. இவர்களின் பணப் பலத்திற்கு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி பள்ளிகள் போட்டியிட முடியாமல் தவிக்கின்றன.இதற்காக சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் பேருந்துகள், வேன்கள், ஆட்டோக்கள் அனைத்து கிராமங்களுக்கும் செல்கின்றன. இதற்கான டீசல் செலவு, மாணவர்களை பிடித்து வரும் செலவு அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இறுதியாக சேர்ந்த ஆசிரியர்களையே சாரும். மாணர்கள் சேரவில்லை என்றால் அவர்களுக்கு வேலையில்லை.
பல லட்சம் பணம் கொடுத்து சேர்ந்துள்ள தங்களது வேலையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல், மே மாதங்களிலேயே தங்களது எல்லையை விட்டு பல்வேறு வேறு கிராமங்களுக்குச் சென்று புத்தகப் பைகளைக் கொடுப்பது, சீருடைகளைக் கொடுப்பது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, பள்ளி வயது இல்லாத குழந்தைகள் முதற்கொண்டு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்துவிடுகிறார்கள். பள்ளி வயது நிரம்பாத குழந்தைகளை இரு ஆண்டுகள் பள்ளிகளில் வைத்திருந்து அவர்களை 5 வயது பூர்த்தியடைந்தவுடன் முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள். இந்த மாணவர்கள் மூன்று, நான்கு வகுப்பு படிக்கும் போது உனது தம்பியை, தங்கையை இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அங்கு படிக்கும் மாணவர்களை மிரட்டி குடும்பத்தில் உள்ள அனைத்துப் பிள்ளைகளையும் சேர்க்க மாணவர்கள் மூலமே நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். மேலும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய நகராட்சி பள்ளியில் 5 வகுப்பு அல்லது 8 வகுப்பு முடித்து வருபவர்களை எங்களது பள்ளியில் சேர்க்க மாட்டோம் என்ற ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை பரப்பிவிடுகிறார்கள்.
இதனால் பெற்றோர் பயந்து போய் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.ஊராட்சி ஒன்றிய, நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கைக்காக கிராமத்திற்குள் செல்லும் போது, பெரும்பாலான கிராமங்களில் அவர்களை மதிப்புக்குறைவாகவே கிராம மக்கள் பார்க்கிறார்கள். அரசுப் பள்ளியில் தங்களது பிள்ளை படித்தால் மதிப்புக் குறைவு என்ற எண்ணம் உள்ளது. மேலும் கிராமத்தில் ஒரு பிள்ளை, அரசு உதவி பெறும் பள்ளிக்கு பேருந்தில் சென்றால், அவர்கள் பிள்ளையைவிட என் பிள்ளை குறைந்ததா? என்று சொல்லி அதே பேருந்தில் அரசு உதவி பெறும் பள்ளி்க்கு தங்களது பிள்ளையை பெற்றோர் அனுப்பி வைக்கிறார்கள்.இது குறித்து பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதி வாய்ப்புகள், நவீன கற்பித்தல் யுக்திகள் இருந்தும், மாணவர் சேர்க்கைக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளுடன் போட்டியிட முடியவில்லை.
அரசின் மானியத்தைப் பெற்றுக் கொண்டு, அரசுப் பள்ளிகளுக்கு விரோதமாக செயல்படும் நிர்வாகங்களின் மானியத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் சுமார் 1 கி.மீ. சுற்றளவுக்குள்தான் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். வேறு கிராமங்களுக்கு வந்து பிள்ளைகளை பிடித்துச் செல்லும் வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் பறிமுதல் செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அரசு கல்வி உதவித் தொகையையை ரத்து செய்துவிட்டு தினமும் ரூ.2 வழங்கி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டும். தங்களது கிராமத்தில் பள்ளிகள் இருக்கும் நிலையில், அங்கே படிக்காமல் வெளியே சென்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு, கல்வி உதவித் தொகை, விலையில்லா பொருட்களை நிறுத்த வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்தால் மட்டுமே, கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைக் காப்பாற்ற இயலும். இதே நிலை தொடர்ந்தால் சில ஆண்டுகளில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்படும் என்றனர்.இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் வாகனங்கள் தங்களது எல்லையை விட்டு வேறு கிராமங்களுக்குச் சென்று பிள்ளைகளை பிடித்து வரக் கூடாது என்று உத்தரவிட இயலாது என்று கூறினர்.
No comments:
Post a Comment