Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 12 June 2014

என்றென்றும் வரவேற்புள்ள சில படிப்புகள் - மாணவர்களின் கவனத்திற்கு...

விரைவாக ஒரு பட்டப் படிப்பை முடித்துவிட்டு, உடனே சம்பாதிக்க தொடங்கிவிட வேண்டும் என்ற ஆவல் இன்று பல மாணவர்களுக்கு இருக்கிறது. ஆனால், நமது பட்டப் படிப்பு நீண்டகாலம் பயன்தரக்கூடியதா? என்பதையும் ஆராய வேண்டும்.

ஏனெனில், ஒரு சில படிப்புகள் அதிக வருமானத்தை வழங்கக் கூடியதாய் தெரியும். ஆனால், சில ஆண்டுகள் சென்றதும், அதன் முக்கியத்துவம் குறைந்து, வருமானம் மங்கி, சம்பந்தப்பட்டவரின் பாடு திண்டாட்டமாகிவிடும். எனவே, நாம் மேற்கொள்ளும் படிப்பு, இன்று மட்டுமல்ல, இன்னுமொரு 10 ஆண்டுகள் ஆனாலும்கூட, மவுசு குறையாத ஒன்றாக இருப்பது முக்கியம்.
எனவேதான், ஒரு படிப்பை தேர்வுசெய்யும் முன்னர், அதன் இன்றைய பலனோடு சேர்த்து, எதிர்கால பலனையும் மதிப்பிடுவது முக்கியம்.
இக்கட்டுரையில், 7 முக்கிய ஆன்லைன் பட்டப் படிப்புகள் பற்றி அலசப்பட்டுள்ளது. அவை, நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் பயன்தரக்கூடியவை. இதைப் படித்துவிட்டு, மாணவர்கள் சிந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்தொடர்பு(Communications)
வாழ்க்கையின் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களிடத்தே, தொடர்புகொள்ளும் ஒரு வாய்ப்பை இத்துறை படிப்பு நமக்கு வழங்குகிறது. மாணவர்களின், முக்கிய விருப்பத் துறைகளில் ஒன்றாக விளங்கும் இத்துறையில் கீழ்கண்ட துறைகளும் அடக்கம். அவை,
கொள்கை, அரசியல், சர்வதேச மேம்பாடு, மாஸ்மீடியா மற்றும் நியூமீடியா உள்ளிட்ட பல.

இத்துறை படிப்பை மேற்கொண்ட மாணவர்கள், வாழ்க்கையில் நல்ல ஏற்றத்தைப் பெறுகிறார்கள். கம்யூனிகேஷன் படிப்பு ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரித்து, தனிமனிதர் மற்றும் அமைப்புகளிடம் வெற்றிகரமாக தொடர்புகொள்ளும் ஆற்றலை வழங்குகிறது.
ஒரு தரவின்படி(data), இத்துறையில் பயின்றவர்களில், உலகளவில், 1.8 மில்லியன் பேர் பணி வாய்ப்புகளை பெற்றுள்ளனர் மற்றும் சராசரியாக 54 ஆயிரத்து 490 அமெரிக்க டாலர்களை வருமானமாக கொண்டுள்ளனர்.
பொருளாதாரம்
நீங்கள் எண்களை கையாள்வதில் திறமையானவராக இருந்து, உங்களின் அரித்மேடிக் மற்றும் ஆராய்ச்சித் திறனை இன்னும் சிறப்பானதாக்கி கொள்ள விரும்புவராக இருந்தால், உங்களுக்கு பொருளாதாரப் படிப்பு பொருத்தமானதாக இருக்கும்.
பொருளாதாரம் படித்தவர்கள், வேலை வாய்ப்பு சந்தையில், தங்களுக்கு ஏராளமான கதவுகள் திறந்திருப்பதை காண்பார்கள். இத்துறை படிப்பை முடித்தவர்களுக்கு, புள்ளியியல் நிபுணர், வணிக முன்னறிவிப்போன்(forecaster), ஸ்டாக் புரோக்கர், கொள்கை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிநிலைகளில், பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் கருவூலத் துறை போன்ற மிக முக்கிய இடங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
பைனான்ஸ் துறைகளில், பல்வேறான வேலை வாய்ப்புகளை, பொருளாதாரம் படித்தவர்கள் தடையின்றி பெறலாம். மேலும், தாராளமான வகையில் நல்ல சம்பளத்தையும் பெறலாம்.
கணிப்பொறி அறிவியல்(Computer science)
தொழில்நுட்ப யுகத்தில், கணிப்பொறி அறிவியலை படிப்பதென்பது, எப்போதுமே ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான். கணிப்பொறி அறிவியல் துறை நிபுணர்கள், கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தில் புதிய அணுகுதல்களை கண்டுபிடிக்கிறார்கள் மற்றும் வடிவமைக்கிறார்கள் மற்றும் தற்போதைக்கு பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பத்தை புதிய முறையில் கையாள்வதற்கான நுட்பங்களை கண்டறிகிறார்கள்.
கணிப்பொறி அறிவியலை ஆன்லைன் முறையில் படிப்பதானது, தொழில்நுட்ப அறிவைப் பற்றிய மேம்படுத்தப்பட்ட அறிவை வழங்குகிறது. இந்தப் பட்டப் படிப்பு, தொழில்நுட்ப பொருட்களை கையாளுதல், சிக்கலான கணினி பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் மருத்துவம், அறிவியல் மற்றும் இதர தொடர்புடைய துறைகளின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான திறன்களை கூர்மைப்படுத்துகிறது.
மார்க்கெட்டிங்
நெட்வொர்க்கிங் திறன்களை, மார்க்கெட்டிங் அதிகரிக்கிறது. உளவியல், புள்ளியியல் பைனான்ஸ் மற்றும் இன்டர்நெட் மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் உங்களின் அறிவை நீங்கள் மேம்படுத்த விரும்பினால், நீங்கள் தாராளமான மார்க்கெட்டிங் படிப்பை மேற்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தல், சேவைகளை அளித்தல், பொதுமக்கள் தொடர்பு, சந்தை ஆராய்ச்சி மற்றும் விளம்பர நிலைகள் ஆகிய பல அம்சங்களை, மார்க்கெட்டிங் உள்ளடக்கியுள்ளது.
இவைதவிர, டிசைனிங் விளம்பர செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை, அறிமுகப்படுத்தப்பட்ட பொருளின் தரம் உயர்த்துதல், வாடிக்கையாளரின் குறைகளை நிவர்த்தி செய்தல், விற்பனையை மேற்பார்வை செய்தல் மற்றும் சந்தை ஆய்வை மேற்கொள்ளுதல் போன்றவையும் மார்க்கெட்டிங் துறை பணியில் உள்ளடங்கும் அம்சங்கள்தான். இது எந்நாளுமே வளர்ந்துவரும் ஒரு துறையாகும். இதில் ஒருவரின் திறமைக்கேற்ப அவரின் வருமானம் எந்த எல்லைக்கும் செல்லும்.
ஹெல்த்கேர்
மனிதன் உயிர்வாழும் வரை, அவனுக்கு நோய் என்று ஏதாவது வந்துகொண்டேதான் இருக்கும். எனவே, இத்துறைக்கு வீழ்ச்சி என்று எப்போதுமே இருக்காது.
மருத்துவம் தொடர்பான தொழில்கள் பலவிதமாக விரிந்து செல்கின்றன. surgical technologists, dental hygienists, registered nurses, medical transcriptionists, and physician assistants போன்றவை அவற்றுல் சில.
ஹெல்த்கேர் தொடர்பான படிப்புகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள, கிளினிக்கல் செட்டிங் என்பது முக்கியமானதுதான். அதுவே சரியான ஒரு சூழ்நிலையை உண்டாக்கும். ஆனால், அதேசமயம், அதுபோன்ற ஒரு சூழலில் முற்றிலும் அடங்காமலேயே, ஒரு மாணவர் பட்டம் பெற முடியும்.
இத்துறை சார்ந்த பணி வாய்ப்புகளின் மூலம், சமூகத்திற்கு நாம் விரும்பிய அளவு சேவை செய்வதுடன், நாம் விரும்பும் அளவிற்கு, சம்பாதிக்கவும் செய்யலாம்.
வணிகம்
உங்களுக்கு நல்ல மேலாண்மைத் திறன், குறைகளை நிவர்த்தி செய்யும் திறமை மற்றும் தலைமைத்துவப் பண்பு ஆகியவை இருந்தால், வணிக உலகம் உங்களுக்காக வாசல்களை திறந்து வைத்து காத்துக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.
கார்பரேட் உலகில் வணிகத்திறன் கொண்ட ஒருவர் நிறைய சாதிக்கலாம் மற்றும் மகிழ்ச்சியாக இருந்து, நாம் விரும்பும் அளவிற்கு பணமும் சம்பாதிக்கலாம். பலவிதமான பணி வாய்ப்புகளும், பணி நிலைகளும் இத்துறையில் உள்ளன. எனவே,ஒருவர் தான் விரும்பியதை தேர்ந்தெடுத்து செல்லலாம்.
ஒருவர், இத்துறையில், புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றியும் பெறலாம் அல்லது இருக்கும் ஒரு அம்சத்திலேயே புதிய மாற்றங்களை செய்து, அதன்மூலம் வெற்றி பெறலாம்.
பொறியியல்
இத்துறை மிகவும் பெரியது. கணினி, பெட்ரோலியம், மெக்கானிக்ஸ், நியூக்ளியர் எனர்ஜி, எலக்ட்ரிகல் சிஸ்டம், ஏரோஸ்பேஸ், கெமிக்கல்ஸ் உள்ளிட்ட வாழ்வின் பல தவிர்க்க முடியாத அம்சங்கள் இத்துறையில் அடக்கம். தொழில்நுட்பம் என்பது, இத்துறையின் மூலமே கையாளப்படுகிறது.
பொறியியல் படிப்பு என்பது ஒரு சக்திவாய்ந்த அதேசமயம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். இத்துறை படிப்போடு, போதுமான மொழியறிவு மற்றும் இதர முக்கிய மென்திறன்களும் அமைந்துவிட்டால், ஒருவர் தனக்கான வேலை வாய்ப்புகளை, எங்கும், எப்போதும் பெறலாம்.
பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற ஒருவர், இதர துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற ஒரு மாணவரின் பணி வாய்ப்புகளுக்கு சமமான, சில நேரங்களில், அதைவிட அதிகமான வாய்ப்புகளை பெற்றுள்ளவராக திகழ்கிறார்.
பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு, தொடர்ந்து வரும் சில ஆண்டுகளில் நாம் படிப்பதற்காக தேர்வுசெய்யும் விஷயம்தான், நமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இன்றைய கார்பரேட் உலகில், தத்துவம் மற்றும் வரலாறு போன்ற உன்னதமான படிப்புகளுக்கு, எந்தவித பெரிய முக்கியத்துவமும் இருக்கப் போவதில்லை.
பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கே முக்கியத்துவம். எனவே, அத்துறையில் ஆர்வமுள்ளவர்கள், தமக்கு விருப்பமான பிரிவுகளைத் தேர்வுசெய்து, சிறப்பான முறையில் படித்தால், வாழ்க்கையில் நன்கு சம்பாதித்து நன்றாக வாழலாம்.

No comments: