தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடந்த 3 நாள்களில் 1,452 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 498 இடங்களில் இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை 11 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஓ.சி., பி.சி. இடங்கள் அனைத்தும் நிரம்பின: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தொடங்கியது. 39 மாற்றுத் திறனாளிகள், விளையாட்டில் சிறந்து விளங்குவோர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 44 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கு புதன்கிழமை (ஜூன் 18) தொடங்கிய கலந்தாய்வு இறுதியில் மொத்தம் 595 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
4 மாணவர்கள் மட்டுமே வரவில்லை: தொடர்ந்து முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பை (பி.சி.) சேர்ந்த மாணவர்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 901 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. கலந்தாய்வுக்கு நான்கு மாணவர்கள் மட்டுமே வரவில்லை. கடந்த 3 நாள்களில் மட்டும் மொத்தம் 1,452 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 22 வரை கலந்தாய்வு: பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்), பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய 571 அரசு எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு வரும் 22-ஆம் தேதி வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment