Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 15 March 2014

தொலைநிலைக் கல்வி முறையிலும் கல்வி நெறிமுறைகள் உண்டு!

ரெகுலர் படிப்பில், ஒருவர் தனது படிப்பிற்காக தினமும் அதிகநேரம் செலவிட முடியும். மேலும், கல்லூரி அல்லது பல்கலை வளாகத்திலேயே அவர் ஒரு நாளைக்கு பல மணி நேரங்கள் செலவிட்டு, தங்களது ஆசிரியர்களுடன் நினைத்த நேரத்தில் உரையாடும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
எனவே, இத்தகைய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தும் ஒரு ரெகுலர் மாணவர், படிப்பில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் 100% அதிகம். ஆனால், தொலைநிலைப் படிப்பை பொறுத்தவரை, மேற்கூறிய அம்சங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது. எப்போதாவது, personal contact programme -களில் ஆசிரியர்களை சந்தித்து, சந்தேகங்களைப் போக்கலாம். மற்றபடி, சுயமாக அமர்ந்துதான் படிக்க வேண்டியிருக்கும்.

ஒப்பீட்டளவில் மேற்கூறிய கருத்துக்கள் சரியானவைதான். ஆனால், நடைமுறை ரீதியில் பார்க்கும்போது விஷயம் வேறுமாதிரியானது. ஏற்கனவே, பணியில் இருக்கும் ஒருவர், அதை ராஜினாமா செய்துவிட்டு, நேரடியாக கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கோ சென்று படிக்க முடியாது. அவர், தனது பணி தொடர்பாக மேலும் சிறந்த அறிவைப் பெறவும், தனது தகுதியை வளர்த்துக்கொண்டு, பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் பெறவும் தொலைநிலை முறையிலேயே ஒரு படிப்பை மேற்கொள்ளும் சூழல் நிலவுகிறது.
ஆனால், தொலைநிலையில் படிப்பதைவிட, நேரடியாக சென்று படிப்பதே பல வகையிலும் சிறந்தது என்ற கருத்து நிலவுகிறது. பொதுவாக, கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்கையில், நேரடியாக படித்தவர்களா? அல்லது தொலைநிலையில் படித்தவர்களா என்று பார்க்கப்பட்டு, நேரடியாக படித்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
கல்வி நிறுவன சூழல் இவ்வாறு இருக்கையில், பொது சூழலையும் நாம் இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏனெனில், தொழில் நிறுவனங்கள் தங்களின் பணியாட்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு ஆகிய அம்சங்களை அளிக்கையில், அவர் நேரடியாக படித்தவரா அல்லது தொலைநிலை முறையில் படித்தவரா என்றெல்லாம் பார்ப்பதில்லை. மாறாக, அவர் என்ன பட்டம் பெற்றுள்ளார் மற்றும் அவரின் பணித்திறமை மற்றும் பணி ஒழுக்கம் ஆகியவற்றை மட்டுமே பார்க்கிறது.
மேலும், அனைவருக்குமே நேரடியாக கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கோ சென்று படிக்கும் வாய்ப்புகள் அமையாது. அதுபோன்ற நபர்களுக்கு தொலைநிலைக் கல்விதான் சிறந்த வரப்பிரசாதம்.
மேலும், நேரடி முறையில் படித்தவர்களால்தான் சாதிக்க முடியும் என்பதல்ல. பல போட்டித் தேர்வுகளில் வெல்வது உட்பட பலவிதமான சாதனைகளில் நேரடியாக படித்தவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைக்காமல், தொலைநிலை முறையில் படித்தவர்களும் செயல்படுகின்றனர். எனவே, நேரடி முறையில் படிப்பதுதான் சிறந்தது மற்றும் மதிப்பு வாய்ந்தது என்ற கருத்தாக்கம் தவறு.
எதில் நல்ல அனுபவம்?
முழுநேர படிப்பில் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை எப்போது வேண்டுமானலும் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற வசதி இருப்பது உண்மைதான். அதற்காக தொலைநிலைக் கல்வி முறையில் அந்த வாய்ப்பே இல்லையென்று கூறிவிட முடியாது.
பல நல்ல பல்கலைகளால் வழங்கப்படும் தொலைநிலைக் கல்வியில், ஒரு பருவத்திற்கு 15 - 21 நாட்கள் வரை PCP வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்ளும் மாணவர்கள் நன்றாக பயன்பெறலாம். பல தொலைநிலைக் கல்வி திட்டங்களில் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கு கட்டாய கவுன்சிலிங் செஷன்கள் உண்டு.
மேலும், case study method, role playing, video lectures, pre-recorded CDs, project works போன்ற பல அம்சங்களும் தொலைநிலைக் கல்வி முறையில் உள்ளன. இதன்மூலம், ஒரு நேரடிக் கல்வி மாணவருக்கு கிடைக்கும் கல்வி அனுபவங்கள், தொலைநிலைக் கல்வி மாணவருக்கும் கிடைக்கிறது. தொலைநிலைக் கல்வி முறையில் நடைபெறும் கலந்துரையாடல் வகுப்புகள் பல அனுபவம் வாய்ந்த கேள்விகளைத் தாங்கி, பயனுள்ளதாய் இருக்கும்.
மேலும், தொலைநிலைக் கல்வியிலும் கல்விசார்ந்த நெறிமுறைகள் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. ரெகுலர் படிப்புகளைப் போல் அல்லாமல், தொலைநிலைப் படிப்பு என்பது ஒரு சுதந்திரமான மற்றும் வசதிக்கேற்ற வகையிலான படிப்பாகும். அதேசமயம், தொலைநிலைக் கல்வி மேற்கொள்வோர், தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ள கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வது முக்கியம். அப்போதுதான் சாதிக்க முடியும்.

No comments: