Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 15 March 2014

பிளஸ் 2 கணிதத் தேர்வில் "சதமடிக்கும்' மாணவர்களின் எண்ணிக்கை சரியும்!

பிளஸ் 2 கணிதத் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாலும், 6 மதிப்பெண் வினா உள்பட 3 வினாக்களில் எழுத்துப் பிழைகள் இருந்ததாலும், இந்தாண்டு 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும், எழுத்துப் பிழை உள்ள வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரினர்.

பிளஸ் 2 கணிதத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்ற இயற்பியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால், கணித வினாத்தாளும் எளிமையாக இருக்கும் என்று மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் வினாக்கள் அதிகம் இடம் பெற்றிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பெரிய விடையளிக்க வேண்டிய வினாக்கள் அதிகம் இருந்ததால் பல மாணவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை முடிக்க முடியவில்லை. நடைமுறையில் கணிதத்தை பயன்படுத்துவது தொடர்பான வினாக்களும் அதிக அளவில் இருந்தது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
6 மதிப்பெண் வினாவில் பிழை:
வினாத்தாளில் 6 மதிப்பெண் பிரிவில் 47-வது வினா வகை நுண் கணிதப் பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பாடத்தின் சேர்ப்புச் சார்புத் தேற்றம் என்ற பிரிவில் பயிற்சி 5.6-ல் 9-வது வினாவாக இடம் பெற்றிருந்த வினா கேட்கப்பட்ட விதம் தவறாக இருந்தது.
இந்தக் கேள்வியில் பிழை இருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். இந்த வினா கேட்கப்பட்ட விதத்தில் மாணவர்களுக்கு விடையும் தவறாகவே வர வாய்ப்புள்ளது. எனவே, இந்த வினாவுக்கு விடை எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கணித முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.விஜயகுமார் கூறினார்.
அதேபோல், ஒரு மதிப்பெண் வினாக்களில் 4-வது கேள்வியிலும், 16-வது கேள்வியிலும் எழுத்துப் பிழைகள் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 16-வது கேள்வியில் குவியங்களுக்கு இடையே என்பதற்குப் பதிலாக, குவியல்களுக்கு இடையே என கேள்வி தவறாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
37 பேர் சிக்கினர்: கணிதப் பாடத்தில் காப்பியடித்ததாக மாநிலம் முழுவதும் 37 மாணவர்கள் சிக்கினர். இவர்களில் தனித்தேர்வர்கள் 8 பேர், பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதியவர்கள் 29 பேர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 மாணவர்கள் பிடிபட்டனர்.

No comments: