Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 28 January 2014

IAS தேர்வுக்கு இலவசப் பயிற்சி

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்வது குறித்தும் ‘புதிய தலைமுறை கல்வி’ இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் நடத்தும் இலவசப் பயிற்சியில் சேர என்ன தகுதி வேண்டும்? மாணவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் ஆர்வலர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவும், இருப்பிடமும், பயிற்சியும் இங்கு இலவசம்.

ஆதிதிராவிட பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களுக்காக தனித்தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. தமிழக அரசு அவற்றை ஒருங்கிணைத்து ஒரே மையமாக பிப்ரவரி 2000 முதல் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நுழைவுத் தேர்வின் மூலம் முதல்நிலைத் தேர்வுக்கு (Preliminary Examination) 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறகு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி (Main Examination)  அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே மாதிரி ஆளுமைத்தேர்வு (Mock-Interview) நடத்தப்படுகிறது. அவர்கள் புதுதில்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட சலுகைக் கட்டணத்தில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் 800 ரூபாயாக இருந்தது. இப்போது அரசு அதை 2,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. பிரதானத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் ஊக்கத் தொகையும், ஆளுமைத் தேர்வுக்கு தில்லி சென்று வர 200 ரூபாய் வழிச் செலவுக்கும் அளிக்கப்படுகிறது.

இந்த மையத்தில் சேர ஒரு நுழைவுத் தேர்வை நாங்கள் நடத்துகிறோம். பட்டப்படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். வெளியிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை அளிக்கப்பட்டு வகுப்புகளுக்கு வரவும், நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இங்கிருக்கும் நூலகம் போட்டித் தேர்வுகள் எழுத அனைத்து வசதிகளும் கொண்ட அருமையான நிலையமாகும்.  இங்கு 21,000 புத்தகங்கள் உள்ளன. கணினிக்கென்றே தனி அறையும் உள்ளது. இங்குள்ள கருத்தரங்குக் கூடம் குளிர்சாதன வசதி கொண்ட அருமையான அரங்கமாகும்.  

இந்த நிறுவனத்திலேயே இரண்டு பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் சிறந்த பேராசிரியர்களும், வல்லுநர்களும் அழைப்புப் பேராசிரியர்களாக தருவிக்கப்படுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பயின்று வெற்றி பெற்ற அலுவலர்களும் அவ்வப்போது தன்னம்பிக்கையூட்டும் உரைகளை வழங்கி இந்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றார்கள்.  தில்லி போன்ற நகரங்களில் பயிற்சி மையம் நடத்தும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணிபுரிகிறவர்களையும் அவ்வப்போது பாடங்களை நடத்தவும், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தவும் பயன்படுத்திக் கொள்கிறோம். மாணவர்களே விருப்பப்படும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். சில நேரங்களில் தனியார் நிறுவனங்களில் படிக்கிற மாணவர்களும் இங்கு வந்து வகுப்புகளை கவனிக்க தடையேதும் நாங்கள் விதிப்பதில்லை. தமிழகத்திலிருந்து நிறைய பேர் இப்பணிகளுக்குச் சென்று, நம் பெருமையை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.

இந்தப் பயிற்சி மையத்தில் எத்தனை பேர் பயிற்சி பெறுகிறார்கள்? எத்தனை பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்?
தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 300 பேர் ஒவ்வொரு வருடமும் பயிற்சி பெறுகிறார்கள். 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை 432 தமிழக மாணவர்கள் பல்வேறு குடிமைப்பணி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய பயிற்சி மையத்திலிருந்து 2010-ஆம் ஆண்டில் 48 பேரும், 2011-ஆம் ஆண்டில் 47 பேரும், 2012-ஆம் ஆண்டில் 49 பேரும் அகில இந்திய அளவில் உயர்ந்த இடங்களைப் பிடித்து தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதைப் போன்ற ஒரு மையத்தை தங்கள் மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் வந்து பார்த்தவண்ணம் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தில் இருந்தும் இதைப் பார்ப்பதற்காக வருகை புரிய உள்ளார்கள்.

முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தயாராவோருக்காக மாதிரி நேர்முகத் தேர்வை (Mock Interview) நடத்துகிறீர்களா?
ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சி அவசியம். எனவே மத்திய தேர்வாணயம் நடத்துவது போலவே நாங்கள் நான்கு ஐந்து முக்கியமான அலுவலர்கள், தனியார் துறையைச் சார்ந்த நிர்வாகிகள், பேராசிரியர்கள், மனநல வல்லுநர்கள் போன்றவர்களைக் கொண்டு அச்சு அசலாக மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்துகிறோம். இதனால் மாணவர்கள் பயமும், பதற்றமும் இன்றி தில்லியில் நடக்கும் ஆளுமைத் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடு குறித்து விரிவாக விவாதிக்கவும் செய்கிறோம். இவையெல்லாம் அவர்களை மெருகேற்றுகின்றன.

வருங்காலத் திட்டங்கள் எவை?
அண்ணா மேலாண்மை நிறுவனம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. இங்கு அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு துணை மாவட்ட ஆட்சியர், மாவட்டப் பதிவாளர், வணிக வரி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் போன்ற அ தொகுதி அலுவலர்களுக்கு ஐந்து வார அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் போன்ற ஆ பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பவானி சாகரில் அரசு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படைப் பயிற்சியும், துணை வட்டாட்சியர்களுக்கு 28 நாட்கள் இடைநிலைப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.

இந்திய வனப்பணி, முதல் பிரிவு போட்டித் தேர்வு போன்றவற்றிற்கும் அறிமுகப் பயிற்சியை நடத்தலாம் என்று பரிசீலித்து வருகிறோம். அது தவிர அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை குழு விவாதமாகவும், கலந்துரையாடலாகவும், ரோல் ப்ளேவாகவும் நடத்தி பயிற்சியை வாழ்க்கையோடும், பணியோடும் தொடர்புபடுத்தும் விதமாக மாற்ற இருக்கிறோம். இப்போது தமிழக அரசு 36.23 கோடி ரூபாய் ஒதுக்கி, பவானி சாகரில் மிகச் சிறந்த பயிற்சிக் கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.   

இங்கு பயிற்சியாளர்களுக்கு நல்ல நூலகம், கணினி அறை, விளையாட்டுக் கூடங்கள், கருத்தரங்கக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் இந்தப் பயிற்சி மையம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி தரப்படாமல் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் அழைப்புப் பயிற்சி அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே ஒட்டு மொத்தமாக பயிற்சியின் தரத்தை எல்லா வகைகளிலும் பயனுள்ளதாக மாற்றி வருகிறோம். பயிற்சியாளர்களும் இந்த மாற்றங்களை நேசித்து முழுமையாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் போட்டிகள், படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தும் சஞ்சிகைகள் போன்றவற்றை ஏற்படுத்தி பயிற்சியை அயர்ச்சியில்லாத அனுபவமாக மாற்றியிருக்கிறோம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களிடம் தாங்கள் காணும் பொதுவான குறைபாடுகள் என்ன?
நமது மாநில மாணவர்கள் தகவல் தொடர்புத் திறனை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது எப்படி?  
சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு.  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும்.  இந்தத் தேர்வு மூன்று கட்டங்களாக  நடத்தப்படுகிறது.  பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு,  பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும்  10 லட்சத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.   இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு  பட்டப் படிப்பு.  அதை தொலைத்தொடர்பின் மூலம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை.  பட்டயப் படிப்பை முடித்தவர்கள், இதை எழுத முடியாது.  

இத்தேர்வை எழுத குறைந்தபட்ச வயது  21.  பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35.  பொதுப்பிரிவினர் நான்கு முறையும்,  பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்டவர் வயது வரம்பு முடியும் வரையும் எழுதலாம்.  

இந்தத் தேர்வை எழுதுவதற்கு பொது அறிவிலும்,  நுண்ணறிவிலும் அதிகத் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.  தற்சமயம் பிரிலிமினரி தேர்வில் ஒருவருடைய ஆராயும் திறனை அறிய சிவில் சர்வீஸ் ‘ஆப்டிடியூட் டெஸ்ட்‘  நடத்தப்படுகிறது.  அதற்கு மொத்த மதிப்பெண்கள் 200.  இரண்டாவது தாள் பொது அறிவு.  அதற்கும் 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இவை மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்.  இதில் சுமார் 10,000 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அடங்கும்.  

மெயின் தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவுத் தாள்கள் நான்கு  இருக்கின்றன.  அவற்றிற்கு 250 வீதம் 1000 மதிப்பெண்கள் உண்டு.  அடுத்ததாக கட்டுரைத்தாள் ஒன்று உண்டு.  அதற்கு 250 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  ஆறாவதாக ஒரே ஒரு விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள் தலா 250 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.  இவை அன்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு தாள் தகுதி பெறுவதற்காக நடத்தப்படுகிறது.  தமிழைப் படிக்காதவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வை எழுதலாம்.  இந்தத் தாள்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்கை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.  

முதன்மைத் தேர்வில் முதல் 2 ஆயிரம் இடங்களை பெறுபவர்கள் ஆளுமைத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.  ஆளுமைத் தேர்விற்கு மொத்தம் 250 மதிப்பெண்கள்.

ஆளுமைத் தேர்விலும்,  பிராதனத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களைக் கூட்டி இறங்கு வரிசையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  முதல் 600 இடங்களைப் பெறுபவர்கள் ஏதேனும் ஒரு பணியை கண்டிப்பாக பெற்றுவிடலாம்.  

சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக வேண்டும் என எண்ணுபவர்கள் பள்ளிக் காலம் தொட்டே செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.   பொது அறிவுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். தகவல் தொடர்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு,  அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.  கல்லூரியில் இந்தத் தேர்வு எழுதுவதற்குத் தோதாக இளங்கலைப் படிப்பையோ, இளம் அறிவியல் படிப்பையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.  பாடப் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல், நிறைய மேற்கோள் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.  முடிந்தால்  நிறைகலைப் படிப்பை தில்லி போன்ற இடங்களில் தொடரலாம்.  தேர்விற்குத் தயாரவது என்று முடிவு செய்த பிறகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது படிக்க வேண்டும்.  விடா முயற்சியும் , அர்ப்பணிப்பும், அகலாத கவனமும், மாறாத ஆர்வமும் சேர்ந்தால் வெகு எளிதில் இதில் வெற்றி பெற்றுவிடலாம்.   

ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவில் வலம் வரும் இளைஞர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக் குணங்களாக நீங்கள் கருதுவது என்ன?
உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, தூய்மை, கனிவு, கருணை, மக்களோடு பணியாற்றும் ஆர்வம், பணத்திற்கு ஆசைப்படாத எளிமை, எப்போதும் மற்றவர்கள் சந்திக்கும் அளவு இயல்பான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட மாணவர்கள் காத்திரமான அலுவலர்களாகப் பரிமளிப்பார்கள்.

No comments: