Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 28 January 2014

டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? வன்கொடுமை சட்டம் பாயும்

"தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, டி.இ.டி., தேர்வில் அரசாணையின்படி, இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனருக்கு புகார் அளித்தார்.
இந்த மனுவை ஆய்வு செய்து, மண்டல இயக்குனர் வெங்கடேசன், பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் டி.ஆர்.பி., தலைவர் ஆகியோருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: என்.சி.டி.இ., (தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்) வழிகாட்டுதலை ஏற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, 181ல் டி.இ.டி., தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை அளிக்க வழி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், தேர்வை நடத்தும் டி.ஆர்.பி., அதை அமல்படுத்தாமல் புறக்கணித்துள்ளது; இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வில், தமிழக அரசின் கொள்கையை 12ம் தேதி முதல்வர் தெளிவுபடுத்தி உள்ளார். அதில் "கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கு, "நெட்" (தேசிய தகுதி தேர்வு), "ஸ்லெட்" (மாநில தகுதி தேர்வு) எப்படி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதோ, அதுபோல் தான், ஆசிரியர் தகுதி தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என முதல்வர் தெரிவித்து உள்ளார்.
"நெட் - ஸ்லெட்" தேர்வுகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கை இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராகவும், தன்னிச்சையாகவும் அமைந்துள்ளது. கடந்த 2011, நவ., 15ம் தேதியிட்ட அரசாணையில் (எண் 181) தெரிவித்த படி ஆசிரியர் தகுதி தேர்வில், இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இடஒதுக்கீடு பிரிவினருக்கான கொள்கையை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவு மீது எடுத்த நடவடிக்கை குறித்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலகத்திற்கு பதில் தெரிவிக்க வேண்டும். இல்லை எனில் இந்த புகார் தொடர்பான விவரம், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு வெங்கடேசன் கூறி உள்ளார்.
இது குறித்து, பிரின்ஸ் கூறுகையில், "அரசாணையில், எந்த தவறும் இல்லை. மிக தெளிவாக உள்ளது. அமல்படுத்துவதில் தான் தவறு நடந்துள்ளது. "மதிப்பெண் சலுகை அளிக்க முடியாது" என எந்த உத்தரவும் சொல்லவில்லை. கடும் போட்டிக்கு இடையே டி.இ.டி., தேர்வை எழுதுகின்றனர். அவர்களுக்கு உரிய மதிப்பெண் சலுகையை அளிக்க, அரசு முன்வர வேண்டும்" என்றார்.

No comments: