Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 10 January 2014

தனியார் நர்சிங் மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் பணி: அரசு ஆணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்தவர்களுக்கும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி வழங்குவது தொடர்பாக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.
தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தவர்களுக்கும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணியமர்த்தப்படுவார்கள் என கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசு ஆணையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி மற்றும் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகினர்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வெளிவரும் டாக்டர்கள், அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்களுடன் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதே போன்று தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள், அரசு நர்சிங் மாணவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை மறுக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபுணத்துவம் பெற்ற அரசு மாணவிகள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இது, சென்னை மருத்துவ சார்புநிலை சேவை விதிகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையும் சட்டத்துடன் உடன்பாடாகிறது.
இது அரசு கொள்கை முடிவும் கூட. மேலும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 16 (1)-ன் படி, தனியார் கல்லூரியில் படித்த மாணவர்களை, அரசுப் பணியில் அமர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதி அரசு பிறப்பித்த ஆணை செல்லும். தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தவர்களுக்கும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: