திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி சங்கம் சார்பில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி கல்லூரி நடத்தப் படுகிறது. தமிழகத்தில் யுஜி புரோகிராம் பேஷன் டெக்னாலஜி, யுஜி புரோகிராம் பேஷன் டிசைனிங் உள்ளிட்ட படிப்புகளை பல கல்லூரிகள் வழங்கி வருகின்றன. இதில் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகள் உள்ளன. யுஜி புரோகிராம் அக்ஸசரி டிசைன், மார்க்கெட்டிங் அண்ட் மர்ச்சன்டையிங் டிசைன், டிசைன் மேனுபேக்சரிங் டிபார்ட்மென்ட், பேஷன் கோ-ஆர்டினேஷன் போன்ற படிப்புகளைப் படிப்பதன்மூலம் நமது தனித்திறமைகளை, கற்பனைத் திறனை வெளிப்படுத்த முடியும்.
சர்வதேச அளவில் ஆடை நிறுவனங்கள், பேஷன் ஷோக்கள், சின்னத் திரை, சினிமாக்கள் தொழில் வளர்ந்து வருகிறது. வட இந்தியாவில் சின்னத்திரை நாடகம் மற்றும் நிகழ்ச்சிகளில் பேஷன் டிசைன் படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கி வருகின்றனர். ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் இப்படிப்பு முடித்தவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
நூறு சதவீத வேலைவாய்ப்பு உள்ள படிப்பு என்பதால் ஆண், பெண் இருபாலரும் எடுத்துப் படித்து, சாதிக்க முடியும். வெளிநாடுகள் சென்று பணி பார்ப்பவர்களுக்கு உகந்த படிப்பாக இது அமைந்துள்ளது. அரசுத் துறைகளிலும் இப்படிப்புக்கான பணி வாய்ப்பு அதிகம் உள்ளது. மத்திய, மாநில கைத்தறி துறைகளிலும் வேலைக்கு சேரலாம்.
சென்னையில் உள்ள பியர்ல் அகாடமி ஆஃப் பேஷன் கல்லூரி, மங்களூரில் மங்களூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி, பெங்களூரில் ஜே.டி. இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட தனியார் கல்லூரிகளில் பேஷன் டிசைன், பேஷன் டெக்னாலஜி படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவு எடுத்தவர்கள் பேஷன் டெக்னாலஜி படிப்பைத் தேர்வு செய்ய முடியும். பேஷன் டிசைன் படிப்பைப் பொறுத்தவரை எந்த குரூப் எடுத்துப் படித்த மாணவர்களும் சேரலாம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அழகப்ப செட்டியார் கல்லூரியில் அப்பேரல் டெக். பேஷன் டெக்னாலஜி படிப்பு உள்ளது. கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, பண்ணாரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, குமரகுரு காலேஜ் ஆஃப் பேஷன் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் பி.டெக். எடுத்துப் படிக்கலாம். பொறியியல் கலந்தாய்வு மூலம் பேஷன் டெக்னாலஜியை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.
இதில் பட்டமேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் பேஷன் மேனேஜ்மென்ட் (எம்.பி.ஏ.) படிக்கலாம். ஆடை அலங்கார நிபுணராக விரும்புபவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடு களிலும் தனித்திறனைக் காட்டி உயரலாம்.