Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 5 December 2013

TRB: முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வணிகவியல் பாடத்துக்கு மறுமதிப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில், வணிகவியல் பாடத்துக்கான தேர்வின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 வணிகவியல் தேர்வில் கேள்வி எண் 5, 44, 63, 90, 98, 111 ஆகியவற்றுக்கான விடைகள் தேர்வு வாரியம் வெளியிட்ட கீஆன்சரில் தவறாக உள்ளது. அக் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என ஷெர்லி சத்திய சிரோன்மணி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
 இம் மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து அளித்த தீர்ப்பு:
 வணிகவியல் பாடத்துக்கான தேர்வின் 5 ஆவது கேள்விக்கு கீஆன்சரின்படி "ஏ' விடை தான் சரியெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர், விடை "டி' தான் சரி என்று குறிப்பிட்டுள்ளார். பாடப் புத்தகங்களை ஆய்வு செய்ததில், கீஆன்சரில் குறிப்பிட்டபடி "ஏ' விடை தான் சரியானது. ஆகவே, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 44 ஆவது கேள்வி தவறானது என்பதால், அது நீக்கம் செய்யப்படுகிறது. தேர்வெழுதிய அனைவருக்கும் ஒரு மதிப்பெண் அளிக்க வேண்டும். இதேபோல, 48 மற்றும் 63 ஆவது கேள்விகள் தவறானவை என ஏற்கெனவே நீதிமன்றம் முடிவு செய்திருப்பதால், முந்தைய உத்தரவின்படி முழு மதிப்பெண் அளிக்க வேண்டும்.
  கேள்வி எண் 90-க்கு "டி' விடை தான் சரியென மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கீஆன்சரில் "ஏ' விடை சரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர் குழுவின் ஆலோசனை பெறப்பட்டது. இதில் கீஆன்சரில் உள்ளபடி "ஏ' விடை தான் சரியெனப் பரிந்துரைக்கப்பட்டது. இதேபோல, 98 ஆவது கேள்விக்கும் கீஆன்சரில் உள்ள விடை தான் சரி என்பதால், மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  அடுத்ததாக 111 ஆவது கேள்விக்கு, கீஆன்சர்படி சரியான விடை எழுதியும் அதற்கு மதிப்பெண் வழங்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் சரியாக விடை அளித்திருக்கும் பட்சத்தில் முழு மதிப்பெண் வழங்க வேண்டும்.
 தேர்வு வாரியம் வெளியிட்ட கீஆன்சரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை இந் நீதிமன்றம் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.     சரியான விடைகளை நீதிமன்றம் உறுதி செய்து, அவற்றை எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், தவறான கேள்விகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சரியான கேள்வி-பதில்களுக்கு எதிரான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  இத்தகைய அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம், வணிகவியல் பாடத்துக்கான விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
 அதன் பிறகு, சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதியானவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிட இந் நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்து இருந்தது. தற்போது மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், புதிதாக முடிவு வெளியிடும் வரை அந்த தடை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: