அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறையால் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்களை பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாற்றுப்பணி அடிப்படையில் இந்தப் பணியிடங்களில் பணியாற்றி வந்தனர்.
இவர்களுக்கு சம்பளம் வழங்க மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வட்டார வள மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக இடமாற்றம் செய்யும் அரசாணை ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல், புதிய கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநிற்கும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வட்டார அளவில் 10 முதல் 15 பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வள மைய பயிற்றுநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக வட்டார வள மைய மேற்பார்வையாளர்களும் உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்களும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வட்டார வள மைய பயிற்றுநர்களும் உள்ளனர். இவர்களுக்கான சம்பளம் அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியிலிருந்து வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் இவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வட்டார வள மைய மேற்பார்வையாளர்களை பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்ய அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் அரசுக்குப் பரிந்துரையை அனுப்பியுள்ளது..
இந்தப் பணியிடங்கள் கைவிடப்பட்டால், பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறினார்.
இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது:
இந்த ஆண்டு 540 தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரி ஆசிரியர் பட்டியலுக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய இடமாற்றத்தால் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தலைமையாசிரியர் பணியிடங்களில் காலியிடங்கள் இல்லை. டிசம்பர் மாதத்தில் திடீரென இடமாற்றம் செய்வதால் மேற்பார்வையாளர்களும் பாதிக்கப்படுவர். எனவே, இந்த முடிவைக் கைவிட வேண்டும் என அவர் கோரினார்.
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்கக அதிகாரிகள் இது தொடர்பாக கூறியது:
இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை காரணமாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் நிர்வாக அளவில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்படுகிறது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கைவிடப்படவில்லை.
இந்தப் பணியிடங்களில் வட்டார வள மையத்தின் மூத்த பயிற்றுநர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்படுவர். அடுத்த ஆண்டு போதிய நிதி கிடைத்தால் இந்தப் பணியிடங்களுக்கு தலைமையாசிரியர்களே நியமனம் செய்யப்படுவர்.
பள்ளிக் கல்வித் துறையில் இருந்து மாற்றுப்பணியில் வந்த தலைமையாசிரியர்கள் மீண்டும் அதே துறைக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. எனவே, மாணவர்களுக்கும் இந்த மாற்றம் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment