வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பிளஸ் 2 வகுப்பில் கணிதம் எடுத்திருக்க வேண்டும். பி.டெக். அக்ரி இன்ஜினியரிங் பட்டப்படிப்பு குமுலூர் வேளாண் கல்லூரியில் உள்ளது. இங்கு மொத்தம் 90 இடங்கள் உள்ளன. விவசாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துவித உபகரணங்கள், தொழில்நுட்பக் கருவிகள் சம்பந்தமான பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. நவீன உபகரணங்கள் தயாரிப்பு, மரபுசாரா எரிசக்தி, மண்வளம், நீர்வள மேம்பாடு தொழில்நுட்பம், நுண்ணிய பாசனம் ஆகியவற்றை முக்கியப் பாடங்களாக உள்ளடக்கியுள்ளது.
விவசாயத்தை மேம்படுத்துவதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாடப்பிரிவாக உள்ளதால், இதைப் படிப்பவர்கள் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம். கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகம் மூலம் இரட்டை பட்டப்படிப்பு படிக்க முடியும். எரிசக்தி துறை, விவசாய உபகரணத் தயாரிப்பு ஆலைகள், நீர்வளம் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இது ஒரு வித்தியாசமான படிப்பு முறையாகும்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பயோடெக்னாலஜி உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு முதல் இப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 55 இடங்கள் உள்ளன. இதைப் படிக்க விரும்புபவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த மரபணு அறிவியல், பிளான்ட் அண்ட் அனிமல் பயோ டெக்னாலஜி, டிஷ்யூசல்ச்சர் ஜெனடிக் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் இதில் உள்ளன. மரபணு மாற்ற முறையில் வீரியச் செடிகளை உருவாக்குவது சம்பந்தமாக கற்பிக்கப்படுகிறது. வெறும் பட்டப்படிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல், எம்.டெக்., பி.எச்.டி. வரை படிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இது ஒரு ஆராய்ச்சி படிப்பு முறை என்பதால், ஆர்வத்துடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
பி.டெக். ஆர்டிகல்ச்சர் (தோட்டக்கலை) பட்டப்படிப்பு படிப்பவர்கள் சுயதொழில் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. காய்கறி, பழ வகைகள், பூக்கள் குறித்த பாடப்பிரிவுகள் இதில் உள்ளன. தோட்டம் அமைத்து, அதில் காய்கறி, பழம், பூக்களை எவ்வாறு உற்பத்தி செய்து, தொழில் தொடங்கி மேன்மை அடையலாம் என தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த பட்டப்படிப்பு அமைந்துள்ளது. கோவை வேளாண்மை பல்கழைக்கழகத்தில் 30 இடங்கள் உள்ளன. இந்த பட்டப்படிப்பு படிப்பவர்களும் இரட்டை பட்டப்படிப்பு படிக்கலாம்.
பி.டெக். ஃபுட் பிராசசிங் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு உணவு மேம்படுத்தல் சம்பந்தமான பாடப்பிரிவைக் கொண்டுள்ளது. உணவுப் பொருட்களான காய்கறி, பழ வகைகளை விளைவிக்கும் முறை, உணவுப் பொருட்கள் குறித்த சகலவிதமான பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டப்படிப்பை முடித்தவர்கள் பால் பண்ணை, ரோலர் ஃபிளவர் மில் என உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திலும் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. மேலும், சுயமாக தொழில் தொடங்கவும் முடியும் என்பதால், தாராளமாக பிடெக். ஃபுட் பிராசசிங் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை எடுத்துப் படிக்கலாம்.
No comments:
Post a Comment