Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 12 December 2013

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தெற்காசியாவிலேயே இருக்கும் ஒரே கல்வியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், 674 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.
கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, ஆண்டுக்கு ஆண்டு இணைப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அந்த இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பது, பாடத் திட்டங்களை வகுப்பது, இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிப்பது என்பன உள்ளிட்ட பணிகளை மட்டுமே இத்தனை ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் இப்போது முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் புதன்கிழமை அளித்த பேட்டி:
பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலை அறிவியல் துறை, மதிப்பு சார்ந்த கல்வித் துறை, கல்வி உளவியல் துறை, கல்வி தொழில்நுட்பத் துறை, பாடத் திட்டம் தயாரிப்பு மற்றும் நிர்வாகத் துறை, கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் துறை என 6 துறைகள் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளன.
இந்த துறைகள் சார்பில் வரும் 2014 ஜனவரி முதல் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எம்.ஃபில். படிப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். பிஎச்.டி.-யை பொருத்தவரை ஒரு பேராசிரியர் 8 பேருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.
இந்த படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு ஜூலை மற்றும் ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்படும்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள துறைகளில் 5 துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் 2 இணைப் பேராசிரியர்கள், 4 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

No comments: