தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது.
கடந்த காலங்களில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடப்பிரிவுகளுக்கு மட்டும் டம்மி எண் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.எனினும், தேர்வுகளில் பல இடங்களில் ஆள் மாறாட்டம், விடைத்தாள்கள் காணாமல்போவது, சேசிங் முறையில் திருத்தும் முகாமைக் கண்டறிந்து மதிப்பெண்கள் பெறுவது உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தமிழக கல்வித்துறை புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்களில், தேர்வு எழுதும் முறையை 2014-ம் ஆண்டில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அரசு முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள ஆணை விவரம்:
இப்போது பொதுத்தேர்வுகளில் வழங்கப்பட்டு வரும் விடைத்தாள்களில் மாற்று எண் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் நிலவி வந்தது.
இந்த முறையை மாற்ற, தேசிய தகவலியல் மையம் மற்றும் அரசுத் தகவல் தொகுப்பு விவர மைய அதிகாரிகளுடன் கல்வித்துறை ஆலோசித்து புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இப்போது விடைத்தாளில் பயன்படுத்தப்பட்டு வரும் டம்மி எண்ணுக்குப் பதிலாக பார்கோடு முறை அமல் செய்யப்படுகிறது. இதில் தேர்வு எழுதுபவரின் பெயர், தேர்வு மையம், தேர்வு நாள், தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
மேலும் விடைத்தாள்களில் தேர்வர்களின் புகைப்படமும் இடம்பெறும். இவையனைத்தும் கொண்ட தாள் "டாப் ஷீட்' எனப்படும். ஒவ்வொரு நாள் தேர்விலும் ஒவ்வொரு டாப் ஷீட் இடம் பெற்றிருக்கும். டம்மி எண்ணைப் பயன்படுத்தும்போது மதிப்பெண்களைப் பதிவு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், புதிய டாப் ஷீட் முறையால் விடைத்தாள்களை தாமதமின்றி திருத்தி மதிப்பெண்களைப் பதிவு செய்ய முடியும்.
No comments:
Post a Comment