ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) முதல் தாளில், 1,735 பேர், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேர் என, 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, 7, 8ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதன்பின் நடத்திய ஆய்வில், இரு தேர்வுகளிலும் சேர்த்து, 50 பேருக்கு, உரிய தகுதிகள் இல்லை என்பது, கண்டறியப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள் இல்லாதது, தேர்வுக்குரிய தகுதியில் பட்டம் பெறாமல், வேறு பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த 50 பேரும், தேர்ச்சிப் பட்டியலில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
மேலும், 50 முதல், 75 பேரின் கல்விச் சான்றிதழ்கள் குறித்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது. பல தேர்வர்கள், வெளி மாநிலங்களில் உள்ள பல்கலையில் படித்துள்ளனர்.
அந்த பட்டங்கள், தமிழகத்தின் கல்வித் தகுதிக்கு நிகரானதுதானா? என்பதை, உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியல், 20ம் தேதிக்குப் பின் வெளியாகும் என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment