ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) கால கட்டத்தை, கல்லூரி ஆசிரியர் பணி அனுபவமாகக் கணக்கில் கொள்ளும் வகையிலான முடிவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எடுத்துள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறியதாவது: பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. இதன் காரணமாக, ஆராய்ச்சிப் படிப்பை சிறப்பான முறையில் மேற்கொள்ளும் பல மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்த நிலையைப் போக்கும் வகையில், பிஎச்.டி. படிப்புக் காலத்தை ஆசிரியர் பணி அனுபவமாகக் கணக்கில் கொள்ளும் வகையிலான முடிவு கடந்த யுஜிசி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
ஆனால், பிஎச்.டி. படிப்பை நேரடியாகவும், விடுமுறை எடுக்காமலும் முடிப்பவர்களுக்கு மட்டுமே, அவர்களின் படிப்புக் காலம் ஆசிரியர் பணி அனுபவமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளபடும். இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்றார் அவர்.
வரவேற்பும், எதிர்ப்பும்: யுஜிசி-யின் இந்த முடிவுக்கு கல்வியாளர்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
யுஜிசி-யின் இந்த முடிவு, ஒரு கல்வி நிறுவனத்தில் ஏற்கெனவே பிஎச்.டி. தகுதி இல்லாமல் பணி செய்து கொண்டிருக்கும் பேராசிரியர்களின் பணி அனுபவம், பதவி உயர்வில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சுந்தரம் கூறியதாவது:
பிஎச்.டி. பட்டம் என்பது "செட்', "நெட்' தகுதிகளைப் போல பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி அவ்வளவுதான். அப்படியிருக்கையில், பிஎச்.டி. படிப்புக் காலத்தை ஆசிரியர் பணி அனுபவமாகக் கணக்கில் கொள்ளவது என்ற யுஜிசி முடிவு ஏற்புடையது அல்ல என்றார் அவர்.
சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எஸ். திருமகன் கூறியதாவது:
பிஎச்.டி. படிப்புக் காலத்தை ஆசிரியர் பணி அனுபவமாகக் கணக்கில் கொள்வது என்பது வரவேற்கத்தக்க முடிவு. ஆராய்ச்சியை ஊக்குவிப்பதுதான் ஒரு பல்கலைக்கழகத்தின் முதல் பணி. அந்த வகையில் யுஜிசி-யின் இந்த முடிவு பிஎச்.டி. படிப்பு மீதான மதிப்பை மேலும் உயர்த்தும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட முன்வருவார்கள் என்றார் அவர்.
தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்:
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் கூறியதாவது:
பிஎச்.டி. படிப்புக் காலத்தை ஆசிரியர் பணி அனுபவமாகக் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற யுஜிசி-யின் முயற்சி, பல்வேறு குழப்பங்கள் காரணமாக பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வரும் விஷயம். இதற்காக உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, ஒரு கல்வி நிறுவனத்தில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் பேராசிரியருக்குத்தான் பணி அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வுக்கும், பிற பலன்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
எனவே, பிஎச்.டி. படிப்புக் காலம் ஆசிரியர் பணி அனுபவமாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற யுஜிசி-யின் முடிவு வரவேற்கத்தக்கது என்றபோதிலும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அதுதொடர்பாக எழுந்து வரும் குழப்பங்கள், நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு தெளிவான வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment