அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
3 ஆண்டு இளநிலைப் படிப்பை 8 ஆண்டுகள் வரை படித்தோரும், ஒவ்வொரு பாடமாக எழுதித் தேர்ச்சி பெற்று, ஏறக்குறைய 15 மதிப்பெண் சான்றிதழ்கள் வரை வைத்துள்ளோரும் கூட பேராசிரியர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
முறைகேடு புகார்களில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. இதன் பிறகு, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருந்த 309 உதவிப் பேராசிரியர்களை மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
எம்.பி.ஏ. முடித்தவர்கள் கூட..: அரசுக் கல்லூரிகளில் பி.பி.ஏ. துறைக்கு மாற்றப்பட்டவர்களில் பலர், பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியான எம்.ஃபில். அல்லது "செட்', "நெட்' அல்லது பிஎச்.டி. தகுதிகள் எதுவுமின்றி வெறும் எம்.பி.ஏ. மட்டும் முடித்திருந்தது தெரியவந்தது. இருந்தபோதும் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
பி.ஏ. படிக்காமல் எம்.ஏ. முடித்தவர்களுக்கும்..: இதுபோல், தமிழ் துறைகளுக்கு அனுப்பப்பட்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் இளநிலை பட்டப் படிப்பே மேற்கொள்ளாமல், பிளஸ்-2 முடித்த பின்னர் தொலைநிலைக் கல்வி முறையில் நேரடியாக எம்.ஏ., முடித்திருப்பது தெரியவந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு மட்டும் இதுபோல் 3 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களை மட்டும் பணியில் சேர்க்காமல் திருப்பியனுப்ப கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
15 மதிப்பெண் சான்றிதழ்கள் வரை வைத்திருப்போரும் கூட..: இளநிலைப் பட்டப் படிப்புக்கு ஆண்டு தேர்வு எனில் 3 மதிப்பெண் சான்றிதழ்களும், செமஸ்டர் எனில் 6 மதிப்பெண் சான்றிதழ்களும் இருக்கும். ஆனால், 300 பேரில் 50-க்கும் மேற்பட்டவர்கள் 10 முதல் 15 மதிப்பெண் சான்றிதழ்கள் வைத்திருப்பதும், 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய இளநிலை பட்டப் படிப்பை அதிகபட்சமாக 6 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகளில் முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இயக்குநர் அலுவலக உத்தரவு காரணமாக, வேறு வழியின்றி இவர்களையும் பேராசிரியர் பணியில் அரசுக் கல்லூரி நிர்வாகங்கள் சேர்த்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற நிர்வாகி சிவராமன் கூறியது:
இதுபோன்று தகுதி குறைந்த நபர்கள் அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டிருப்பது, கல்வித் தரத்தைப் பாதிக்கும் செயலாகும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment