அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களுக்கு எம்.ஃபில், பிஎச்.டி., "செட்' அல்லது "நெட்' தகுதிகள் இல்லாவிட்டாலும் பேராசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அரசுக் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக, தகுதியில்லாதவர்கள் என்று திருப்பியனுப்பப்பட்ட பேராசிரியர்களை அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் பணிக்கு சேர்த்து வருகின்றன. பெரும் முறைகேட்டில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருந்த 309 உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்களை மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
பேராசிரியர்கள் போராட்டம்: இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் பலர் குறிப்பாக அரசுக் கல்லூரிகளில் பி.பி.ஏ. துறைக்கு மாற்றப்பட்டவர்கள் எம்.பி.ஏ., முதுநிலை பட்டப் படிப்பை மட்டுமே முடித்தவர்கள் என்பதும், பேராசிரியர் தகுதிக்கான "செட்' அல்லது "நெட்' தேர்ச்சி அல்லது பிஎச்.டி தகுதி பெறாதவர்கள் என்பதும் முந்தைய தகுதியான "எம்.ஃபில்.' படிப்பைக் கூட முடிக்காதவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஏராளமான அரசுக் கல்லூரிகள் இவர்களை பணியில் சேர்க்காமல் திருப்பியனுப்பியது. இந்த நிலையில் இவர்களை பணியில் கட்டாயம் சேர்த்தாக வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் கடந்த 3-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி, தகுதி இல்லாதவர்கள் என்று திருப்பியனுப்பப்பட்டவர்களை அரசுக் கல்லூரிகள் மீண்டும் பணியில் சேர்த்து வருகின்றன. இவ்வாறு தகுதி இல்லாதவர்களை பணியில் அமர்த்துவதைக் கண்டித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாச்சலம் கூறியது:
கல்வித்தரம் பாதிக்கும்: யுஜிசி வழிகாட்டுதலின்படி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் 2006-க்கு முன்பாக பேராசிரியர் பணியில் சேர்ந்திருந்தால் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத தேர்ச்சியுடன் "எம்.ஃபில்.' முடித்திருக்க வேண்டும். 2006-க்கு பின்பு வந்த யுஜிசி நடைமுறைப்படி, முதுநிலை பட்டப் படிப்புடன் "செட்' அல்லது "நெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பை முடித்திருக்க வேண்டியது கட்டாயம்.
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரிய தகுதியே இல்லாமல் பணிக்குச் சேர்ந்தவர்களை இப்போது அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றுவது பணித் தகுதி நடைமுறைகளையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
இதனால், உயர் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்பதோடு, உரிய தகுதியுடன் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் பல லட்சம் பேரின் நிலையை கேள்விக்குறியாக்கிவிடும். இவர்களைப் பணியில் சேர்ப்பதால், அரசுக் கல்லூரிகளில் பல்வேறு நிர்வாகக் குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உண்ணாவிரதம்: எனவே, இதனைக் கண்டித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகிற 13-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர். இதேபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தகுதியில்லாதவர்கள் பேராசிரியர் பணிக்கு அனுப்பப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அரசுக் கல்லூரி மன்றத் தலைவர் சிவராமனும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment