Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 21 July 2015

செவிலியர் பட்டயப் படிப்பு: ஒற்றைச் சாளர முறைக்கு அரசு முயற்சி?

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் 23 அரசுக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 2,100 செவிலியர் பட்டயப் படிப்பு இடங்கள் உள்ளன. அதே போன்று தமிழகத்தில் 160 தனியார் கல்லூரிகளும் அவற்றில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டயப் படிப்பு இடங்களும் உள்ளன.
இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறன. தனியார் கல்லூரி இடங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகத்தால் நிரப்பப்படுகின்றன. 
செவிலியர்: தனியார் செவிலியர் கல்லூரிகளில் 50 சதவீத பி.எஸ்சி. இடங்கள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. அரசு செவிலியர் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வின் மூலம் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதே முறையைப் பின்பற்றி, தனியார் செவிலியர் பட்டயப் படிப்பு கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து தனியார் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் கடிதம் அனுப்பியுள்ளது. 
புதிய முறை: அரசுக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் வேலை என்ற நிலை இருந்து வந்தது. இந்நிலையில் அரசு, தனியார் என எந்தக் கல்லூரியில் படித்தாலும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி, அரசு மருத்துவமனையில் பணி அமர்த்தப்படும் புதிய முறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவர்கள் இடையே போட்டி அதிகரித்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் முன்பே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக ஒற்றைச் சாளர முறையை தனியார் கல்லூரிகள் ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியது: செவிலியர் பட்டயப் படிப்புக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றுவதற்கு தனியார் செவிலியர் கல்லூரிகளிடம் இருந்து சாதகமான பதில்கள் வரவில்லை. இதைத் தொடர்ந்து, தனியார் கல்லூரிகளிடம் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தத் தீர்மானித்துள்ளோம். இது ஒரு தொடர் செயல்முறை ஆகும். எனவே நிகழ் கல்வியாண்டில் முந்தைய ஆண்டுகளைப் போலவே அரசுக் கல்லூரி இடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

No comments: