கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பான பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். படிப்பு இடங்களில் இம்முறை கூடுதலாக 40 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு இதற்கான அனுமதியை கடந்த மாதம் அளித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டு வரை 280 ஆக இருந்த மொத்த இடங்களின் எண்ணிக்கை நிகழாண்டில் 320 ஆக உயர்ந்துள்ளது.
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் (பி.வி.எஸ்சி.) கடந்த ஆண்டு வரை சென்னை (120 இடங்கள்), நாமக்கல் (80), திருநெல்வேலி (40), ஒரத்தநாடு (40) ஆகிய பகுதிகளில் உள்ள 4 கல்லூரிகளில் மொத்தம் 280 இடங்கள் இருந்தன.
நிகழாண்டில், திருநெல்வேலி, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள இரண்டு கல்லூரிகளிலும் தலா 20 இடங்களை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இதன் மூலம் சென்னை (120), நாமக்கல் (80), திருநெல்வேலி (60), ஒரத்தநாடு (60) என 4 கல்லூரிகளின் இடங்களில் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலிடம் 15 சதவீத இடங்கள் அதாவது 48 இடங்கள் ஒப்படைக்கப்படும்.
மீதமுள்ள 272 இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடத்தப்படும். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், விளையாட்டுப் பிரிவின் கீழ் 5 (மகளிர் -3, ஆண்கள் -2) இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 1 இடமும், பிளஸ்-2 தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்படும்.
நான்கரை ஆண்டு பி.டெக். படிப்புகள்: இதுதவிர சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உள்ள கல்லூரியில் நான்கரை ஆண்டு பி.டெக். (எஃப்.டி.-உணவுத் தொழில்நுட்பம்) படிப்பு (20 இடங்கள்) வழங்கப்படுகிறது.
ஒசூரில் உள்ள கல்லூரியில் பி.டெக். (பிபிடி-கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்)படிப்பு (20 இடங்கள்) வழங்கப்படுகிறது.
பி.டெக். பால் பொருள்கள் தொழில்நுட்பம் (20 இடங்கள்) என்ற புதிய நான்கரை ஆண்டு இளநிலை பட்டப் படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளிலும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment