சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆய்வு:
நாடு முழுவதுமுள்ள சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யூனானி, யோகா மற்றும் இந்திய மருத்துவம் ஆகிய கல்லூரிகளில் உள்ள கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஊழியர்கள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில் (சி.சி.ஐ.எம்.)ஆய்வு நடத்தும்.
அந்த ஆய்வின் முடிவில் அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையை, சி.சி.ஐ.எம்-ன் செயற்குழு ஆய்வு செய்து, இறுதி அறிக்கை மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் கல்லூரிகளுக்கு இடங்களை ஆயுஷ் துறை நிர்ணயிக்கும்.
அதன்படி கடந்த ஆண்டில் இந்திய முறை படிப்புகளுக்காக தமிழகத்தில் அரசு இடங்கள் 336, தனியார் கல்லூரிகளில் 1280 இடங்களையும் மத்திய அரசு நிர்ணயித்தது.
சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்.):
தமிழகத்தில் பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் உள்ளன. ஐந்து தனியார் கல்லூரிகளில் 144 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.):
ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 50 இடங்கள் உள்ளன. இதுதவிர, மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 85 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.
ஹோமியோபதி (பி.எச்.எம்.எஸ்.):
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள் உள்ளன. இதுதவிர 9 தனியார் கல்லூரிகளில் 395 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.
யுனானி (பி.யு.எம்.எஸ்.):
யுனானி மருத்துவப் படிப்புக்கு தமிழகத்தில் சென்னையில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் மொத்தம் 26 இடங்கள் உள்ளன.
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்.):
சென்னை அரும்பாக்கத்தில் செயல்படும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் உள்ளன. நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 181 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.
நிகழாண்டு ஆய்வு:
நிகழ் கல்வியாண்டுக்கான இடங்களை நிர்ணயிப்பதற்கான மத்திய அரசின் சி.சி.ஐ.எம்.-இன் ஆய்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நிறைவடைந்துவிட்டது.ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இடங்களுக்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை
இது குறித்து இந்திய மருத்துவ முறைகளுக்கான தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியது: கல்லூரிகளுக்கான இடங்கள் குறித்த மத்திய அரசின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. அதுபுறம் இருக்க தமிழக அரசின் சார்பில் விண்ணப்பங்கள், விவரக் குறிப்பேடுகள் உள்ளிட்டவை அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கப்படும். அது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment