தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 32,184 மாணவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வியாழக்கிழமை ஒதுக்கப்பட்டது.
மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் உள்ளிட்டோர் 10 இலக்க சம வாய்ப்பு எண்ணை கணினி மூலம் 32,184 மாணவர்களுக்கும் சில நொடிகளில் ஏற்படுத்தினர். இணையதளத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்ப பதிவெண்ணை www.tn.gov.in என்ற தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்து, தங்களது சம வாய்ப்பு எண்ணைத் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்னை உள்ளதால், தமிழக அரசின் இணையதளத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சம வாய்ப்பு எண் எப்போது பயன்படுத்தப்படும்? எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது ஒரே கட்-ஆஃப் மதிப்பெண், பிளஸ் 2 தேர்வில் உயிரியல் - வேதியியல் பாடங்களிலும் ஒரே மதிப்பெண், நான்காவது பாடமாகக் கருதப்படும் கணிதத்திலும் ஒரே மதிப்பெண், ஒரே பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்ட மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
கடந்த கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரித்தபோது, 164 மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றிருந்தனர். அவர்களில் மேலே குறிப்பிட்டவாறு அனைத்து ஒப்பீடுகளிலும் சமமாக இருந்த 68 மாணவர்களை வரிசைப்படுத்த கடந்த கல்வி ஆண்டில் சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது.அதேபோல இந்த ஆண்டும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களை வரிசைப்படுத்த இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும். எனவே, எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 15-இல் வெளியிடும்போது, நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எத்தனை மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவரும் என்று டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
ஜூன் 15-இல் தரவரிசைப் பட்டியல்:
மறு கூட்டல், மறு மதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பிதுள்ள பிளஸ் 2 மாணவர்களின் உயிரியல் - வேதியியல் - இயற்பியல் உள்ளிட்ட பாடங்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி.யை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலை அளிப்பதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.டி. கிடைத்தவுடன் மாணவர்களின் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் இரண்டு நாள்களில் தயாரிக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment