தமிழகத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது தெரியவந்து உள்ளது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்து உள்ளது. மாவட்ட அளவில் கூட அரசு பள்ளிகளின் மாணவர்கள் ரேங்க் பெறவில்லை என்பது பெற்றோரை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் முதல் இடத்தை வழக்கம் போல் மாணவியரே பிடித்தனர். திருப்பூர் பவித்ரா மற்றும் கோவை நிவேதா ஆகியோர் 1,192 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றனர். கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி 1,193 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதலிடத்துக்கான மதிப்பெண் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பெற்று உள்ளனர். மூன்றாம் இடத்தை நாமக்கல் மாணவி பெற்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டப் பள்ளிகள் அதிக அளவில் மாநில ’ரேங்க்’ பிடித்து வருகின்றன. இந்த ஆண்டும் அதேநிலை தொடர்கிறது. இதேபோல் பாட வாரியான முதல் மூன்று இடங்களிலும் இந்த மாவட்டங்களின் ஆதிக்கம் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 24; சேலம், 16; ஈரோடு 16; கோவையில் 15 பேர் என முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பிற மொழிப் பாடங்களில் சென்னை முன்னிலையில் இருந்தாலும் தமிழ் வழியில் குறிப்பிட்ட மாவட்டங்களின் பள்ளிகளே மீண்டும் மீண்டும் முதலிடங்களைப் பிடித்துள்ளன. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, மதுரை, திருச்சி, விருது நகர் போன்ற மாவட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு முன் வரை பொதுத் தேர்விலும் தேர்ச்சியிலும் முன்னிலை பெற்றன.
என்னாச்சு ’ஆக்ஸ்போர்ட்’ அந்தஸ்து?
திருநெல்வேலி ’தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட்’ என்றே அழைக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை மாறி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டப் பள்ளிகள் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இனி மற்றமாவட்டத்தினர் மாநில ’ரேங்க்’ அளவுக்கு மதிப்பெண்களைப் பெற முடியாதா என்ற அச்சம் எழுந்து உள்ளது. இதேபோல் மெட்ரிக் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் நிலை மிக மோசமாகியுள்ளது.
மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவ, மாணவியர் எவ்வித மாநில ரேங்கையும் பெறவில்லை. சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட தேர்ச்சி விகிதத்தில் 6 சதவீதம் குறைவாகவே பெற்றுள்ளன. மாவட்ட அளவிலான இடத்தைக் கூட கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அரசு பள்ளிகள் பெறவில்லை. அதனால் அரசுபள்ளிகளின்
ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு விடை திருத்தம் போன்றவற்றிலும் மாற்றம் வேண்டும். வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம் பெறுவோர் யார்; அவர்களின் நடவடிக்கைகள் என்ன; வினாத்தாள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது; தேர்வு நடவடிக்கைகளில் அதிகாரிகளை சுழற்சி முறையில் இடம் பெறச் செய்யாததற்கு என்ன காரணம் என்பன போன்ற பல முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் குறிப்பிட்ட மாவட்ட ஆசிரியர்கள் கல்வித்துறை உயரதிகாரிகளுடன் அதிக நெருக்கம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களின் பள்ளிகள் எப்படி தங்களை நிலை நிறுத்தப் போகின்றன; அந்த மாவட்ட மாணவர்களின் எதிர்காலம் எப்போது பிரகாசமாகும் என்று பெற்றோர் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
உள்ளூர் ஆசிரியர்கள் ஏன்?
தேர்வுப் பணிகளில் உள்ளூர் ஆசிரியர்களையே பயன்படுத்துவதும் தேர்வு முடிவை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு ஓசூர் தனியார் பள்ளி யில் ’வாட்ஸ் அப்’பில் வினாத்தாள் வெளியான சம்பவமே பெரும் உதாரணமாகும். இந்த சம்பவத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல் சில குறிப்பிட்ட ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டு, வினாத்தாள் ’லீக்’ ஆனது. இதுபோல் தேர்வு மையங்கள் மற்றும் விடை திருத்தப் பணிகள் மதிப்பெண் பதிவிடும் பணி போன்றவற்றில் அதிகார துஷ்பிரயோகம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment