மாணவர்கள் கல்வி கற்பதுடன் வாழ்வில் சிறந்து விளங்குவதற்கு பள்ளி பாடத் திட்டத்தில் வாழ்க்கைத்திறன் கல்வி அவசியம் என்று சென்னையில் நடைபெற்ற வாழ்க்கைத்திறன் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
வளரிளம் பருவத்தினரின் முன்னேற்றம், வாழ்க்கைத்திறன்கள் குறித்த இரண்டு நாள் மண்டல மாநாடு இந்திய வாழ்க்கைத்திறன் கல்விச் சங்கம், யுனிசெஃப் ஆகியவை சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாடு குறித்து அதன் இயக்குநர் ஏ.எஸ்.பத்மாவதி கூறியதாவது:
உலக சுகாதார நிறுவனம் ஒருவருக்குத் தேவையான வாழ்க்கை திறன்களாக பத்து திறன்களை அறிவித்துள்ளன. அதில் தன்னைப்பற்றி அறிதல், சக மனிதர்களுடன் உறவுகளைப் பேணுதல், கூர் சிந்தனை, படைப்பாற்றல் சிந்தனை, மன உணர்வுகளுக்கு ஈடு கொடுத்தல் போன்றவை அடங்கும்.
இந்த திறன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டிருப்பது வாழ்வில் சிறந்து விளங்க வழிவகுக்கும். அதேநேரத்தில், வாழ்க்கைத்திறன் கல்வியை இளம் வயதிலேயே மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது, வரும் தலைமுறையை மேம்படுத்த உதவும்.
எனவே, பள்ளிகளில் வாழ்க்கைத்திறன் கல்வியை பாடத்திட்டமாக கொண்டுவர வேண்டும். இதற்கான பாட நூல்கள் உருவாக்கப்படுவதுடன், ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், வாழ்விலும் சிறந்து விளங்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment