பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமும், தேசிய புத்தக அறக்கட்டளையும் (என்பிடி) இணைந்து ‘சென்னை புத்தக சங்கமம்’ என்ற பெயரில் புத்தகக் கண்காட்சியை சென்னையில் ஏப்ரல் 13 முதல் 23-ம் தேதி வரை நடத்துகின்றன.
இது தொடர்பாக புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் வி.அன்புராஜ், கோ.ஒளிவண்ணன், புகழேந்தி, தி.வேணுகோபால் ஆகியோர் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:
உலக புத்தக தினத்தைக் கொண்டாடும் வகையில் இளம் தலைமுறையினர் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ‘சென்னை புத்தக சங்கமம்’ என்ற பெயரில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 3-வது புத்தகக் கண்காட்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 13-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கே கண்காட்சி தொடங்கிவிடும். இதில், 150 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு என பல்வேறு துறைகள் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு கிடைக்கும். 10 சதவீத தள்ளுபடி உண்டு. மேலும், உலக புத்தக தினமான ஏப்ரல் 23-ம் தேதி கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி (15 சதவீதம்) அளிக்கப்படும்.
தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறும்படங்களும் திரையிடப்படும். குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்.
புத்தகக் கண்காட்சியை 13-ம் தேதி மாலை 6 மணிக்கு தென்னிந்தியாவுக்கான மலேசிய தூதர் சித்ராதேவி ராமய்யா தொடங்கிவைக்கிறார். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.10. கண்காட்சி தொடர்பான முழு விவரங்களை தெரிந்துகொள்ள தனி இணையதளம் (www.chennaiputhagasangamam.com) உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment