அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டித் தேர்வில் 57 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கும் வகையில் புதிய அறிவிப்பாணை மே மாதம் 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, போட்டித் தேர்வு 2014, அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற்றது. மொத்தம் 23,764 பேர் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 35 என நிர்ணயித்ததால் சர்ச்சை எழுந்தது.
இந்த வயது வரம்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் 57-ஆக உயர்த்தியது.
விண்ணப்ப விநியோகம் முடிவடைந்த பிறகே இதற்கான அரசாணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வழங்கியது. இதைத் தொடர்ந்து, இந்தப் பணி நியமனம் தொடர்பான பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் தொடங்கியுள்ளது.
உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு 57 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பாணை மே 15-ஆம் தேதிக்குள் வெளியிடப்பட உள்ளது. போட்டித் தேர்வு ஜூன் 2-ஆவது வாரத்திற்குள் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே இந்தப் போட்டித் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கல்வித் தகுதி என்ன? பொறியியல் துறைகளில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பி.இ. அல்லது பி.டெக். மற்றும் எம்.இ. அல்லது எம்.டெக். படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் அல்லாத துறைகளில் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்) முதுநிலைப் பட்டப் படிப்பில் 55 சதவீதத்துக்கும் குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் யுஜிசி "நெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment