உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பெண் பாதுகாவலரை நியமிக்குமாறு மாணவர் பாதுகாப்புக்கான புதிய வழிகாட்டுதலில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு ஆளாவதைத் தடுத்து, சுமுகமான சூழ்நிலையில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய மாணவர் பாதுகாப்பு வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் உயர் கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:
கல்வி நிறுவனம், மாணவர் விடுதி ஆகியவற்றைச் சுற்றி, சுழல் கம்பி வேலியுடன் கூடிய சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் மூன்று நுழைவு வாயில் அல்லது அதற்கு குறைவாகவே இருக்க வேண்டும்.
அந்த நுழைவு வாயிலில் குறைந்தபட்சம் 3 பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
இதில், பெண்களை சோதனை செய்து அனுமதிக்க வசதியாக இந்த மூவரில் ஒரு பெண் காவலரை நியமிப்பது அவசியம்.
கல்லூரியில் மட்டுமல்லாமல், விடுதிகளிலும் உயிரி தொழில்நுட்பத்துடன் கூடிய (பயோ மெட்ரிக்) மாணவர் வருகைப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பேரழிவு மேலாண்மை பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment