அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்காக ஆன் - லைனில் (இணையத்தில்) இன்று முதல் பதிய, திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு இடங்களில் சேவை மையம் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில் உள்ளவர்கள், விண்ணப்ப சேவை மையங்களை அணுக வேண்டுமானால், அதிகபட்சமாக, 80 கி.மீ.,துாரம், பயணம் மேற்கொள்ள வேண்டும் என, அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆய்வக உதவியாளர் பணிக்கு, பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக கொண்டு, தேர்வு நடத்தப்பட உள்ளது.
179 இடங்களுக்கு...
பத்தாம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வித்தகுதி உடையவர்களுக்கு, வயது உச்ச வரம்பு கிடையாது என்பதால், மாவட்டத்தில், 179 இடங்களுக்கு, ஒரு லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூரில் இரண்டு, பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்தூர், செங்குன்றத்தில் தலா ஒன்று என, ஆறு இடங்களில் இதற்கான சேவை மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று (ஏப். 24) முதல், மே 6ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அரசு தேர்வுகள், சேவை மையங்களில், ’வெப் கேமரா’ மூலம் புகைப்படத்துடன், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் அவர்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
5 பேருந்துகள் பிடித்து...
இந்நிலையில், பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவள்ளூர், மணவாள நகர் என, ஐந்து பேருந்துகளை பிடித்து, 80 கி.மீ., தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்படியே சென்றாலும், ஒரே நாளில் பதிவு செய்ய, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டையில் மேலும் சில பதிவு சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”மாவட்ட தலைமையிடத்தை மையமாக கொண்டு, பதிவு மையங்களை ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டே, மாவட்டத்தில் ஆறு சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’ என்றார்.
No comments:
Post a Comment