Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 1 August 2014

தமிழகத்தில் 1,112 உதவிப் பேராசிரியர்கள் புதிதாக நியமனம்; 163 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆயிரத்து 112 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா. மேலும், நடப்பு கல்வியாண்டில் பல்வேறு பட்டப் படிப்புகளில் 163 பாடப் பிரிவுகள் புதிதாக தொடங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 623 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்கள், புதிய பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் என மொத்தம் ஆயிரத்து 112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 797 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 எம்.பில்., பாடப் பிரிவுகள், 52 பி.எச்.டி., பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.
புதிய கல்லூரி: மாநிலத்தில் கடந்த மூன்றாண்டுகளில் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என்ற வகையில் 37 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மயிலாடுதுறை, சீர்காழி தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, மயிலாடுதுறையில் மணல்மேடு என்ற இடத்தில் புதிதாக இருபாலரும் படிக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் தொடங்கப்படும்.
சென்னை கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கரில் ரூ.95 கோடி செலவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தல் பயிலும் இளநிலை மாணவர்களுக்காக புதிய மாணவர்-மாணவியர் விடுதிகளும், குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு நிர்வாகக் கட்டடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்காக புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.
தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி உள்ளிட்டவை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணையதள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

No comments: