வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு, சிறு-குறு தொழில்களில் பயிற்சி அளிக்கும் வகையில் "அம்மா' திறன் வேலைவாய்ப்பு, பயிற்சித் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மேலும், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாகத் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:
தமிழகத்தில் 9.68 லட்சம் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மனித ஆற்றல்களை வழங்கவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் "அம்மா' திறன் வேலைவாய்ப்பு,பயிற்சித் திட்டம் என்ற புதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
25 ஆயிரம் பேருக்குப் பயிற்சி: இந்த திட்டத்தின்கீழ் 18 முதல் 25 வயதுள்ள பொறியியல், தொழில் கல்வியியல், தொழில் பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற வேலையில்லாத இளைஞர்களுக்கு 6 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தொழில் நிறுவனங்கள் மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையும், ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அவர்களின் திறன்கள் அறியப்பட்டு சான்றிதழ்களையும் அளிக்கும்.
பயிற்சிக்குப் பிறகு இளைஞர்களை தொழில் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும். நிகழ் நிதியாண்டில் புதியத் திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்படும். அதில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
மானியம் அதிகரிப்பு: வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், அவர்களின் தொழில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 97 தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆர்.கோம்பை, காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரை, கரூர் மாவட்டம் புஞ்சைகாளக்குறிச்சி ஆகிய இடங்களில் புதிதாக மூன்று தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். அவற்றுக்கு ரூ.23 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம், 345 தொழில் மனைகள் அமைக்கப்பட்டு ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
சிட்கோவின் மூலம் விழுப்புரம் மாவட்டம் காட்டு வன்னஞ்சூர், தருமபுரி மாவட்டம் பர்வதனஹள்ளி, அரியலூர் மாவட்டம் மல்லூர், நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடி ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் திருமுல்லைவாயில் (திருவள்ளூர்), திருமுடிவாக்கம் (காஞ்சிபுரம்), கருப்பூர் (சேலம்), வாழவந்தான்கோட்டை (திருச்சி), கப்பலூர் (மதுரை) ஆகிய 5 இடங்களில் மகளிர் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த 5 பூங்காக்களில் உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையம் அமைக்கப்படும். பொது காட்சியகம், நிர்வாக அலுவலகம், வங்கி உள்ளிட்டவை கொண்டதாக அது இருக்கும். சென்னை கிண்டி அரசு தொழில்நுட்பப் பயிற்சி மையத்தில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்படும். டான்சி நிறுவனத்தின் சார்பில் புதிதாக மர அறைகலன் உற்பத்தித் தொழிற்சாலை சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைக்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
No comments:
Post a Comment