Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 8 July 2014

புதிய கல்வி உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசின் முழு பொறுப்பிலும் செலவிலும் பொதுப்பள்ளிகள் மூலம் கல்வி வழங்கும் வகையில் புதிய கல்வி உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.

 சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கல்வி உரிமை தொடர்பான சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அவர் பேசியது:
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற விதியுள்ளது. இதன் காரணமாக, இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது அதை எதிர்க்குமாறு சென்னையின் பிரபல தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தன.
 ஏழை மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சேர்ந்தால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் எனவும், இந்தப் பிரச்னையில் பள்ளி நிர்வாகங்களுடன் இணைந்து பெற்றோர்கள் போராட வேண்டும்
எனவும் அந்தப் பள்ளிகள் தெரிவித்தன. இது மிகப் பெரிய பிரச்னையாக மாறியது.
 பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு மனுக்களை அனுப்பினர். ஆனால், இன்று வரை அந்தப் பள்ளிகள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
14 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்குவது அரசின் கடமை என உண்ணிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 இந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே 86-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில், அரசியல் சட்டத்தில் 21 (ஏ) பிரிவு சேர்க்கப்பட்டது. அந்தப் பிரிவின் படி 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது.  இந்தச் சட்டப்பிரிவு, கல்வி வழங்குவதை அரசு நினைக்கும் வகையில் செயல்படுத்த அனுமதி வழங்குகிறது.
 அதேபோல், குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதை அரசின் கடமையாக இல்லாமல், பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் கடமையாக மாற்றும் 51 ஏ (கே) எனும் மற்றொரு பிரிவும் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு உச்ச நீதிமன்ற தீர்ப்பையே நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது.
 இதனடிப்படையிலேயே, 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 இந்தச் சட்டத்தில் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் கல்வியைப் பற்றியோ, 14 முதல் 18 வயது வரை குழந்தைகளின் கல்வியைப் பற்றியோ குறிப்பிடப்படவில்லை. 18 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள் எனும்போது இவர்களுக்கு கல்வி பெறும் உரிமை இல்லையா?
 மேலும் இந்தச் சட்டத்தில் அருகமைப் பள்ளிகள் தொடர்பாக தெளிவான வரையறை இல்லை. இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் வழங்குமாறு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து அரசு இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.
 இப்போது அனைத்துவிதமான சிறுபான்மையின பள்ளிகளுக்கும் 25 சதவீத இடஒதுக்கீடு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 அரசின் முழு செலவிலும் பொறுப்பிலும் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட அருகமை பொதுப்பள்ளிகள் மூலமாக மட்டுமே அனைவருக்கும் கல்வி உரிமையை உறுதிப்படுத்த முடியும். இதைத்தான் கோத்தாரி கமிஷன் முதல் முத்துக்குமரன் கமிஷன் வரை பரிந்துரைத்துள்ளன.
 இப்போதுள்ள கல்வி உரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற்று, புதிய கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக நாம் அனைவரும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

No comments: