தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முதல் நாளான நேற்று 184 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
கலந்தாய்வு அட்டவணையின் அடிப்படையில் முதல் கட்டக் கலந்தாய்வில் குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு மறு ஒதுக்கீடு, சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் 23 இடங்களுக்கு ஒதுக்கீடு என மொத்தம் 184 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் மீதம் 42 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
மருத்துவக் கல்லூரி மாற்றம் காரணமாக சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்களின் எண்ணிக்கை 25-லிருந்து 38-ஆகவும், அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பி.டி.எஸ். காலியிடங்களின் எண்ணிக்கை 16-லிருந்து 21-ஆகவும் உயர்ந்துள்ளது. மறு ஒதுக்கீடு குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org--இல் வெளியிடப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு-கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மறு ஒதுக்கீடு கலந்தாய்வு இன்றும் நடைபெற உள்ளது. தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment