ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில்,காலியாக உள்ள 1,408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து சட்டசபையில் நடந்த விவாதம்:
லிங்கமுத்து: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அமைச்சர்: 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 1.27 லட்சம் பேர்; 301 பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் 31,594 பேர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் 11,412 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன; 10,004 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது 1,408 ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளன. அவற்றையும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி: நலத்துறை பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வதில்லை. வருவாய் துறை அதிகாரிகள் தான் செல்கின்றனர். இதனால் இப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதை தடுக்க நலத்துறை பள்ளிகளை கல்வித்துறையோடு இணைக்க வேண்டும்.
அமைச்சர்: தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 82 சதவீத பேர், பிளஸ் 2 தேர்வில் 82 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment