தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 62 எம்.பி.பி.எஸ்.காலியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுவரை அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1961 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கடந்த நான்கு நாள்களாக நடைபெற்ற பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வில் அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.) ஆகியோருக்கு உரிய இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டன. இதுவரை மொத்தம் 1961 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் சனிக்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற கலந்தாய்வில் 924 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது; 31 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 211 மாணவர்களுக்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் சேர 113 மாணவர்களுக்கும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர 23 மாணவர்களுக்கும் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்று படிப்பைத் தேர்வு செய்யாத மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கு உரிய 47 எம்.பி.பி.எஸ். இடங்கள், பழங்குடி வகுப்பினருக்கு உரிய 15 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 62 காலியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதே போன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 87 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 11 பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவற்றுக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) கலந்தாய்வு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இரண்டாம் கலந்தாய்வு ஜூலை இரண்டாவது வாரத்தில் நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வின்போது இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைக்காத திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ். இடங்கள், திருச்சி-சேலம் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி உள்பட 6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment