தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவுக்கு ஜூலை 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்புக் காவல் படை பிரிவைச் சேர்ந்த வி.இளங்கோவன், கே.சங்கர், டி.சுரேஷ் உள்ளிட்ட 11 பேர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலைக் காவலராக 2011-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தோம். பிறகு 6 மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு தமிழ்நாடு சிறப்புப் காவல் படையில் பணியமர்த்தப்பட்டோம்.
பட்டாலியனில் முதல் 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, மாவட்ட ஆயுதப் படைப் பிரிவுக்கு செல்லலாம் என 1990-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ஓராண்டு பணியாற்றிய பிறகு போலீஸின் மற்ற பிரிவுகளுக்குச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, பயிற்சிக்குப் பிறகு 10 ஆண்டுகள் சிறப்புக் காவல் படையில் பணியாற்ற வேண்டும் எனவும், அதன் பிறகே ஆயுதப்படைப் பிரிவுக்குச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் மூலம் நாங்கள் எங்கள் குடும்பத்தை நீண்ட நாள்கள் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனதளவில் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். நிரந்தரமாக ஒரு பணியிடம் கிடைப்பதில்லை. இதனால், சிறப்புக் காவல் படையில் இருப்பவர்கள் உரிய காலத்தில் திருமணம் செய்ய முடியவில்லை.
அதோடு, உரிய நேரத்தில் உரிய பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. இது தவிர, 10 ஆண்டுகள் ஒரே பணியில் இருப்பதால், பணிமூப்பு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
எங்களைத் தேர்வு செய்யும்போது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுதப்படைக்கு சென்றுவிடலாம் எனக் கூறினர்.
இப்போது இவ்வாறு மாற்றம் செய்துள்ளனர். எனவே, 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை ரத்து வேண்டும். 1990-ஆம் ஆண்டின் அரசாணையைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு ஜூலை 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment