Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 6 June 2014

ஆசிரியர்கள் பள்ளியில் செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை: கல்வி அதிகாரி

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் செல்போன் பயன்படுத்தினார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறினார்.
அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் ஆகியோர் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
பள்ளியின் கல்வித் தரம் வளர்ச்சிக்கும், பள்ளி வளர்ச்சிக்கும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து ஆசிரியர்களும் உட்பட்டு பணிபுரிய வேண்டும்.விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளபடி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இது குறித்து தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு முடிக்கும் மாணவருக்கும், நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பதுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி முடிந்துவிட்டது. இவர்களை உயர் வகுப்பில் சேர்க்கும் பொறுப்பு அவர்களது பெற்றோர் தொடர்புடையது. ஆனால் சில தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளி நேரத்தை வீணாக்கி தங்களுக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளில் ஈடுபட்டுள்ள கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது.
இதனால் தொடக்கக் கல்வித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் அவப்பெயர் ஏற்படும் நிலையை சில தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்துகிறார்கள். மேலும் பள்ளி நேரத்தில், தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கு முழு நேரமும் உழைத்திடவே அரசு ஊதியம் வழங்குகிறது. மாணவர்களை மேல் வகுப்பில் சேர்க்கும் தங்களது சமுதாயப் பணியை தலைமை ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு பின்னர்தான் பார்க்க வேண்டும். இது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு புதியதாக ஏற்படுத்தவும், சேதமடைந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பை பழுது பார்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் தேவைப்படும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறித்தும், பழுது நீக்க வேண்டியவை குறித்தும் உடனடியாக உரிய படிவத்தில் தரவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
கூட்டத்தில் 125 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments: