Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 12 June 2014

7 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி

தமிழகத்தில் 7 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 2000 பொறியியல் இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.
ஒரு அரசு கல்லூரி உள்பட 7 புதிய கல்லூரிகளுக்கு 2014-15 கல்வியாண்டுக்கு ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 152 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கீழ் வந்தன.
இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிகளை யுஜிசி தயாரித்து வெளியிட்டது. இந்த வழிகாட்டுதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தபோதும், புதிய வழிகாட்டு நெறிகள் அரசிதழில் வெளியிடப்படவில்லை.

இதனால், புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு கால அவகாசம் போதாது என்பதால், புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும் மற்றும் ஏற்கெனவே இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அனுமதி வழங்குவதை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக யுஜிசி அறிவித்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து ஒடிஸô தொழில்நுட்ப கல்லூரிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், இப்போது நடைமுறையில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி வழிகாட்டுதல் கையேட்டின் (2013-14) அடிப்படையில், 2014-15 கல்வியாண்டில் புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியையும், ஏற்கெனவே இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி நீட்டிப்பு வழங்கும் நடைமுறையையும் மேற்கொள்ளலாம். இதற்கான உத்தரவை ஏஐசிடிஇ 10 நாள்களில் வெளியிடவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் அனுமதியை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பங்களை அனுப்புமாறு ஏஐசிடிஇ கடந்த மாதம் கேட்டுக்கொண்டது.
இதில் இப்போது தமிழகத்தில் மட்டும் 7 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏஐசிடிஇ தலைவர் மான்தா கூறியது:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, புதிய கல்லூரிகள் தொடங்கவும் ஏற்கெனவே இயங்கி வரும் கல்லூரிகளுக்கு அனுமதி நீட்டிப்பு வழங்கவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. நாடு முழுவதிலுமிருந்து 320 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் 152 புதிய கல்லூரிகளுக்கு 2014-15 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 16 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதில் சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் ஜெயராம் பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி நாராயண குரு பொறியியல் கல்லூரி, தஞ்சை இந்தியன் பயிர் நடவு தொழில்நுட்ப நிறுவனம், கோவை அருகே நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் புதுவை வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மற்றும் ராக் பொறியியல் கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இப்போதுள்ள மொத்த பொறியியல் இடங்களோடு கூடுதலாக 2 ஆயிரம் பி.இ. இடங்கள் சேரும் என்றார் அவர்.

No comments: