சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டல சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை நண்பகல் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் தமிழகத்தில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு சென்னை மண்டலத்தில் 45,064 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 92.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒரு சதவீதம் அதிகம் ஆகும் என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் டி.சுதர்சனராவ் கூறினார்.
சென்னை, திருவனந்தபுரம் தவிர பிற மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாணவர் 493 மதிப்பெண்:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவர் அக்ஷய் அரவிந்தன் 500-க்கு 493 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இவர் கணிதத்தில் 100, இயற்பியலில் 98, வேதியலில் 99, ஆங்கிலத்தில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸில் 98 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்த மாணவரின் தந்தை அரவிந்தன், தாயார் சுமதி. இருவரும் மருத்துவர்களாக உள்ளனர்.
பொறியாளராக விருப்பம்:
இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தது தொடர்பாக மாணவர் அக்ஷய் அரவிந்தன் கூறும்போது, தேர்வில் இவ்வளவு அதிகமான மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஐ.ஐ.டி.யில் பொறியியல் துறையைப் படிக்க விரும்புகிறேன். நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறேன். தாய், தந்தை இருவரும் மருத்துவர்கள் என்பதால், அந்தத் துறைக்குப் பதிலாக வேறு துறையைப் படிக்க விரும்புகிறேன், என்றார் அவர்.
சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி ஸ்ரேயா ராஜ்குமார் இந்தத் தேர்வில் 500-க்கு 492 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவர் கணிதம், வேதியியலில் தலா 100 மதிப்பெண்ணும், இயற்பியலில் 97 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்ஸில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
இவரது தந்தை ஆர்.எஸ்.ராஜ்குமார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தாய் ரேகா ராஜ்குமார் இல்லத்தரசியாக உள்ளார்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது குறித்து ஸ்ரேயா கூறியது:
பிளஸ் 2 தேர்வில் 480-க்கு மேல் மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையென்றால் தமிழகத்தில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியில் பொறியியல் படிப்பேன் என்றார் அவர்.
நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் எச்.ஷ்ரவண் 500-க்கு 491 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழகத்திலிருந்து சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை இந்த ஆண்டு 10,775 மாணவர்கள் எழுதினர்.
No comments:
Post a Comment