Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 29 May 2014

மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் போன்ற வார்த்தைகளை நீக்கக் கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் பெயருடன் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் போன்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை நீக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் வி.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: மாநில வாரியான பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், ஓரியண்டல் போன்ற நான்கு வகையான பாடத் திட்டங்கள் இருந்தன.
அவையனைத்தையும் களைந்து ஒரே கல்வி முறையை செயல்படுத்தும் நோக்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தது. சமச்சீர் கல்வி முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

அரசுப் பள்ளிகள் மற்றும் இதர அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே கல்வி முறைதான் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளை விட தங்களது பள்ளி கல்வி முறை சிறப்பானது என்பதை வெளிப்படுத்துகின்றன.
இவை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு மனு அளித்தேன். இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை. அதனால், தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளின் பெயருடன் சேர்த்து மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் வார்த்தைகளை நீக்குவதற்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விடுமுறைகால நீதிபதிகள் அருணாஜெகதீசன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments: