தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு இதுவரை 4,500 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
இதற்கான விண்ணப்ப விற்பனை மே 14-ஆம் தேதி தொடங்கியது. அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்கள் ஜூன் 2 வரை விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 2 ஆகும். விண்ணப்பங்களை வாங்கிய மையத்திலேயே அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்தப் படிப்பில் சேருவதற்காக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800 இடங்கள் உள்ளன. அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன.
இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 1,200-க்கு 540 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியின விண்ணப்பதாரர்கள் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
இந்தப் படிப்பில் சேர இணையதளம் மூலமாக ஒற்றைச்சாளர கலந்தாய்வு நடத்தப்படும். விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட மையத்திலோ இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.
No comments:
Post a Comment