தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால அறிவியல் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் மே 14-ஆம் தேதி வரை நடைபெறும் முகாமை விசாகா மனநல ஆலோசனை மையத்தின் மனநல ஆலோசகர் ஜி.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய நிர்வாக இயக்குநர் பி.அய்யம்பெருமாள் கூறியது: பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும் அவர்களுக்கு அறிவியல் குறித்த பயத்தை போக்கவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில் 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில் இயற்பியல், கணிதம், வானியல், செய்முறை அறிவியல், யோகா மற்றும் மனோதத்துவம் குறித்த வகுப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், பொருள்கள் வடிவமைப்பு குறித்த செய்முறை வகுப்புகளும் நடைபெறுகின்றன.
முதல் நாள் வகுப்பில் கேளிக்கை இயற்பியல் மற்றும் விளையாட்டின் மூலம் கணிதம் கற்றல் உள்ளிட்ட வகுப்புகள் நடைபெற்றன. முகாமில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறந்த பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒரு நாள் முகாம்களை நடத்த உள்ளோம்.அதில் அடிப்படை வானியல், வெறும் கண்ணால் எப்படி வானியல் நிகழ்வுகளை கண்டறிவது உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்படும் என்றார்.
பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குநர் எஸ்.செüந்தரராஜ பெருமாள், மூத்த அறிவியல் உதவியாளர் ஜி.துரைராஜ் ஞானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment