Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 21 May 2014

அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்: 5 பேர் 200-க்கு 200 கட் ஆப் மார்க் - 3,000 பேர் 185-க்கு மேல் கட் ஆப்

அரசு பள்ளிகளில் படித்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் தொழில்கல்வி படிப்புகளில் சேருவதற்கு 185-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
பணக்காரர்கள் மட்டுமின்றி சாதாரண தொழிலாளர்கள்கூட தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். பிள்ளைகளின் படிப்புக்காக தங்கள் சக்தியை மீறி கடன் வாங்கி செலவு செய்யவும் ஏழை பெற்றோர் தயாராகவே உள்ளனர். காரணம், அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் நன்றாக இருக்காது. அங்கு படித்தால் பொறியியல், மருத்துவப் படிப்பில் சேர்வது மிகவும் கஷ்டம் என்பது பல பெற்றோரின் எண்ணம்.
அவர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி இருக்கின்றன அரசு மேல்நிலைப் பள்ளிகள். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியி யல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப் புகளில் சேர 185-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

5 பேர் 200-க்கு 200 கட் ஆப்
அதாவது, தொழில்கல்வி படிப்புகளில் சேர தகுதியாக கருதப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் குறைந்தபட்சம் 185 முதல் அதிகபட்சம் 200 மதிப்பெண் வரை கட் ஆப் எடுத்துள்ளனர். இவர்களில் 5 பேர் முழு கட் ஆப் (200-க்கு 200) பெற்று சாதனை படைத்திருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு விசேஷ பயிற்சி அளித்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
200-க்கு 200 கட் ஆப் பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப அரசுக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். அல்லது எம்.பி.பி.எஸ். இடம் கிடைப்பது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. 185-க்கு மேல் கட் ஆப் எடுத்திருப்பதால் அவர்களால் அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் எளிதாக சேர முடியும்.
100 சதவீதம் தேர்ச்சி
கட் ஆப் 190-க்கு குறைவாக உள்ளவர்களில் ஒரு சிலருக்கு ஒருவேளை அரசு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போனால்கூட, முதல்தரமான தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சர்வ சாதாரணமாக இடம் கிடைத்துவிடும். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 113 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் 84.1 சதவீதமாக உயர்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 5.1 சதவீதம் அதிகம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சாதனை படைக்கத் தொடங்கிவிட்டால் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் பெற்றோரின் போக்கு நிச்சயம் மாறும்.

No comments: