பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், நோட்டு உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள், கடந்தாண்டை விட இந்தாண்டு 20 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வினால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
காலங்கள் மாற மாற பொதுமக்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத வகையில், பொருட்களின் விலை உயர்வும் உள்ளது. தேசிய அளவில் பெட்ரோல், டீசல் போன்றவை விலை உயர்த்தப்படும் போது, அன்றாடம் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.
குறிப்பாக சிறு கடைகள் முதல் பெரிய அலுவலகங்கள் வரை நாள்தோறும் பயன்படுத்தும் ஸ்டேஷனரி பொருட்களின் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஒரு பென்சில் ரூ.3 - 4 வரையும், எண்பது பக்க நோட்டுகள் 15 முதல் 20 வரையும், 190 பக்கங்கள் கொண்ட நோட்டுகள் (சாதாரணம்) ரூ.25-ரூ.27 வரையிலும், டீலக்ஸ் நோட்டுகள் ரூ.35 முதல் 40 வரையிலும் விற்கப்பட்டது. இந்தாண்டு இவற்றின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்படி, பென்சில் ரூ.5 - 6 வரையும், எண்பது பக்க நோட்டுகள் ரூ.18-24 வரையும், 190 பக்கங்கள் கொண்ட சாதாரண நோட்டுகள் ரூ.30-33 வரையும், 190 பக்கங்கள் கொண்ட டீலக்ஸ் நோட்டுகள் ரூ.40-45 வரையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர ஸ்டேஷனரி பொருட்களும் 20 சதவீதம் விலை உயர்த்தி விற்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் விலை ஏற்படும்போது, பெட்ரோலியம் பொருட்களும் விலை உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டில் 50-60 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது.
நவீன தொழில்நுட்பங்களுக்காக, கம்ப்யூட்டர் பயன்பாடு இருந்தாலும், காகித நோட்டு புத்தகங்களின் பயன்பாடுகளே அதிகமாக உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுமக்கள், அலுவலகப் பணியாளர்கள், டாக்டர்கள், பள்ளி மாணவர்கள் என குழந்தைகள் முதல் பெரியவர் வரை அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்றாக நோட்டு புத்தகங்கள் உள்ளது. இதன் பயன்பாடு அதிகரித்த போதிலும், விலை உயர்வால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போது, நோட்டு புத்தகங்களின் விலை உயர்த்தப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறையும் சமயங்களில் நோட்டு, புத்தகங்களின் விலையும் குறைக்கப்படாமல் இருப்பது மக்களை மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது. மத்தியில் அமையவிருக்கும் புதிய அரசு இதற்கான தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் அதிக எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
விலை உயர்வு ஏன்?
உடுமலை வியாபாரிகள் கூறியதாவது: விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். பெட்ரோல் விலை உயரும்போது, வாகன ஓட்டிகள் மட்டுமே பாதிக்கப்படுவர் என்ற தவறான கருத்து உள்ளது. பெட்ரோல் விலை உயரும் ஒவ்வொரு ஆண்டிலும், ஸ்டேஷனரி பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் மட்டும் டீசல் விலையினை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாநிலங்களுக்குள் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வரி நிர்ணயம் செய்வதை குறைக்க வேண்டும்.
No comments:
Post a Comment