ஐ.எஸ்.சி. (இந்தியன் ஸ்கூல் சர்ட்டிஃபிகேட்) பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் 99.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐ.எஸ்.சி. பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (மே 17) மாலை வெளியிடப்பட்டன.
இதில் தமிழக அளவில் சென்னை சிஷ்யா பள்ளி மாணவி ஆஷிகா டிரீஸா சாஜு அதிகளவாக 98 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
"இந்தியன் ஸ்கூல் சர்ட்டிஃபிகேட்' (ஐ.எஸ்.சி.) என்றழைக்கப்படும் பிளஸ் 2 பாடத்திட்டம் தமிழகத்தில் மொத்தம் 23 பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. இதே பாடத் திட்டம் 10-ஆம் வகுப்பு வரை ஐ.சி.எஸ்.இ. ("இந்தியன் சர்ட்டிபிகேட் ஆஃப் செகன்டரி எஜுகேஷன்') என்று அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 23 பள்ளிகளில் இருந்து 556 மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை (ஐ.எஸ்.சி.) எழுதினர்.
இவர்களில் 276 பேர் மாணவர்கள், 280 பேர் மாணவிகள் ஆவர். இந்தத் தேர்வை எழுதியவர்களில் 2 மாணவர்களும், 1 மாணவியும் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சி விகிதம் 99.46 சதவீதமாகும்.
இந்திய அளவில் மொத்த தேர்ச்சி 95.27 சதவீதம்: நாடு முழுவதும் இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 868 பள்ளிகளைச் சேர்ந்த 68,723 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 95.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.12 சதவீதம் அதிகம்.
இந்தத் தேர்வை எழுதிய 37,558 மாணவர்களில் 35,372 பேர் (94.18 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். 2,186 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்வு எழுதிய 31,165 மாணவிகளில் 30,100 பேர் (96.58 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். 1,065 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இந்திய அளவில் தென் மண்டலம் அதிகபட்சமாக 98.32 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. மேற்கு மண்டலம் குறைந்தபட்சமாக 95.74 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தத் தேர்வை வெளிநாடுகளில் இருந்து 201 மாணவர்கள் எழுதினர். இதில் 3 பேர் தேர்ச்சிபெறவில்லை.
No comments:
Post a Comment