மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வனங்களை பாதுகாக்கும் வகையில் கோடையில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 17 ஆவது புலிகள் காப்பகம் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, மான், யானை போன்ற அரிய விலங்கினங்களும், உலகில் வேறு எங்கும் இல்லாத அரிய தாவர வகைகளும் உள்ளன.
பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ்பெற்ற இக்காப்பகத்தில் வனங்கள், விலங்கினங்களை பாதுகாக்கும் வகையில் மலையடிவாரக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுத் தொழில் செய்யும் வகையில் சூழல் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையடிக் கிராம மக்களுக்கு மாற்றுத் தொழில் செய்ய நேரடியாக கடனுதவி வழங்கப்படுகிறது.
காப்பகத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணைகளும், மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், களக்காடு நம்பிகோயில் அமைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணதீர்த்த அருவி, செங்கல்தேரி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன.
அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் விடுமுறை நாட்களிலும், கோடை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். புலிகள் காப்பகத்தில் கோடை காலங்களில் தீ விபத்து ஏற்படாத வகையில் வனத்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு.
கோடையில் கடும் வெப்பம் இருப்பதால் வனப்பகுதியில் வறட்சி காரணமாக தண்ணீர் கிடைக்காமல் வன விலங்குகள் பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் வனப்பகுதியில் மனித நடமாட்டம் காரணமாக தீ விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மே மாதம் புலிகள் காப்பகத்தில் முக்கிய தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் செல்லலாம். அடர்ந்த வனப்பகுதியான மாஞ்சோலை, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள், களக்காடு செங்கல்தேரி போன்ற முக்கிய பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. அருவிகள், கோயிலுக்கு அனுமதி பெற்று செல்லலாம். வரும் மே 1 ஆம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட இருப்பதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment