நம் நாட்டில் நூறு பேர் பள்ளிப் படிப்பை முடித்தால் அவர்களில் 13 அல்லது 14 பேர்தான் மேற்படிப்புக்காகக் கல்லூரியில் நுழையும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். உயர் கல்வி பெறுவதற்குப் பண வசதி இல்லாதது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன. உலகிலேயே குறைந்த வட்டியில் அதிக அளவில் கல்விக் கடன் தரும் நாடு இந்தியாதான் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
யாருக்குக் கல்விக் கடன்?
l பள்ளிக் கல்வியில் (பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வி) தேர்வு பெற்றிருக்க வேண்டும்.
l நுழைவுத் தேர்வு மூலமோ அல்லது தகுதியின் அடிப்படையிலோ, அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு பெற சேர்க்கை அனுமதி (அட்மிஷன் லெட்டர்) பெற்றிருக்க வேண்டும்,
l ஒருவேளை நுழைவுத் தேர்வு இல்லாமல் பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை அனுமதி பெற்றிருந்தால், பள்ளி இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (எஸ்.சி./ எஸ்.டி. மாணவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)
மேற்கூறிய தகுதி இருக்கும்பட்சத்தில் நிர்வாக (மேனேஜ்மெண்ட்) கோட்டாவில் சீட்டு கிடைத்திருந்தாலும் வங்கியில் கல்விக் கடன் பெறலாம்.
மேற்கூறிய தகுதி இருக்கும்பட்சத்தில் நிர்வாக (மேனேஜ்மெண்ட்) கோட்டாவில் சீட்டு கிடைத்திருந்தாலும் வங்கியில் கல்விக் கடன் பெறலாம்.
எந்ததெந்த படிப்புகள் ?
கலை, வணிகம், அறிவியல், சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், கணினி, நிர்வாகவியல் ஆகிய வற்றில் பட்டப் படிப்புகள் அல்லது முதுநிலைப் பட்டப் படிப்புகள் மற்றும் பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட தொழில்முறை கல்விகள் ஆகியவற்றுக்கும் வங்கிக் கடன் பெறலாம். இவை தவிர ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எக்ஸ்.எல்.ஆர்.ஐ. போன்ற மேல் நிலைக் கல்வி நிலையங்கள் மற்றும் வெளி நாட்டுக் கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் படிப்பதற்கும் வங்கிக் கடன் தரப்படுகிறது.
கடன் தொகை எவ்வளவு?
உள் நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெளி நாடுகளில் கல்வி பயிலச் செல்லும் மாணவர் களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் கிடைக்கிறது. இந்தக் கடன் வசதி பெறுவதற்கு, மாணவர்கள் செலுத்த வேண்டிய சிறிய தொகை (மார்ஜின்) என்று ஒன்று உண்டு. ஆனால், ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு மார்ஜின் தொகை செலுத்த வேண்டியதில்லை. ரூ.4 லட்சத்துக்கும் மேல் கல்விக் கடன் பெறும் மாணவர்கள் 5 சதவீதம் மார்ஜின் தொகை செலுத்தினால் போதுமானது. வெளி நாடுகள் சென்று படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம் மார்ஜின் தொகை செலுத்த வேண்டும்.
செலவினங்களுக்குக் கடன்
ஒரு மாணவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முழு காலத்துக்கும் என்னென்ன கல்விச் செலவுகள் உண்டோ, அதற்குக் கடன் கிடைக்கும். உதாரணமாக, கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகங்கள் வாங்கும் செலவு, நூல் நிலையக் கட்டணம், தங்கும் இட வசதி கட்டணம் அல்லது விடுதிக் கட்டணம், வாகனச் செலவு, உபகரணங்கள் அல்லது கருவிகள் வாங்கும் செலவு, ஆய்வுகூடக் கட்டணம் எனக் கல்வி தொடர்புடைய அனைத்து வகை செலவினங்களுக்கும் வங்கிக் கடன் பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
l கல்விச் சான்றிதழ் மற்றும் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் பட்டியல்
l புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
l இருப்பிடச் சான்று
l கல்லூரி சேர்க்கைக்கான கடிதம்
l கல்லூரிக் கட்டணங்களின் ஆண்டு வாரியான பட்டியல்
l பெற்றோரின் வருமானச் சான்றிதழ்
l பிணை (செக்யூரிட்டி) பற்றிய தகவல்கள் (தேவையானால் மட்டுமே)
செக்யூரிட்டி தேவையா?
ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு எவ்வித பிணையமும் (செக்யூரிட்டி) தேவைவில்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ. 7.5 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு அந்தத் தொகைக்கு ஈடான மதிப்புள்ள ஒரு நபரது உத்திரவாதம் (கியாரண்டி) தேவை. ரூ.7.5 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் பெறுவொர் தான் விண்ணப்பிக்கும் கடன் தொகைக்கு நிகரான மதிப்புடைய சொத்துக்களைப் பிணையாக (கொலட்டரல் செக்யூரிட்டி) வங்கியிடம் வைக்க வேண்டும். அல்லது கடன் தொகைக்கு நிகரான மதிப்புடைய தேசிய சேமிப்புப் பத்திரங்கள் அல்லது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பாலிசி பத்திரங்கள் ஆகியவற்றை வங்கியிடம் பிணையாக வைக்கலாம்.
வட்டி விகிதம்
வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி சற்று மாறுபடும். பொதுவாக வட்டி 11 சதவீதத்துக்குள் இருக்கும்.
கால அவகாசம்
கல்விக் கடன் முடிந்து ஓராண்டு அல்லது வேலையில் சேர்ந்து 6 மாதங்கள், இதில் எது முதலில் நிகழ்கிறதோ, அந்தத் தேதியில் இருந்து இ.எம்.ஐ. தவணை முறையில் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும். புதிய விதிமுறையின்படி ரூ. 7.5 லட்சம் வரையிலான கடன்களை10 ஆண்டுகளிலும், ரூ.7.5 லட்சத்துக்கு மேற்பட்ட கடன்களை 15 ஆண்டுகளிலும் திரும்பச் செலுத்தலாம்.
கல்விக் கடனைக் கல்விக் காலம் முடிந்த பிறகு திரும்பச் செலுத்தலாம். எனினும் வசதி இருந்தால், வட்டியையாவது ஆரம்பம் முதல் செலுத்த முடியுமானால், கணிசமான வட்டித் தொகையை மிச்சப்படுத்தலாம் என்பது கவனிக்கத்தக்கது.
விதிமுறைகள் நியாயமான இருந்தபோதிலும் சில நேரங்களில் கல்விக் கடனுக்காக வரும் மாணவர்களை வங்கிகள் அலைக்கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுத்தான் செய்கிறது. இதை மனதில் கொண்டு கல்விக் கடன் திட்டத்தை வங்கிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தி மாணவர்களைக் கைதூக்கி விட வேண்டும். அதேபோல் கடன் பெறும் மாணவர்கள், நன்றாகப் பயின்று, தேர்ச்சி பெற்று, வேலையில் சேர்ந்து, கடனைத் தாமதம் இல்லாமல் திரும்பச் செலுத்தி ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றிட வேண்டும்.
No comments:
Post a Comment