பிளஸ் 2 தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலை, மும்முரமாக செய்து வருகிறது. 2.5 லட்சம் விண்ணப்பங்கள் மற்றும் கல்லூரிகள் பற்றிய விளக்க கையேடு, அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் பி.இ., கலந்தாய்வு, வழக்கமான அட்டவணையில் நடக்குமா? அல்லது ஏதேனும் மாற்றம் வருமா? என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், ராஜாராமிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
கலந்தாய்வில் ஒரு மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டைப் போல் ஜூன் இறுதியில், கலந்தாய்வு துவக்கி ஜூலை மாத இறுதிக்குள் முடிக்கப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்பு துவங்கும். அதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
கடைசி நேரத்தில், விண்ணப்பம் பற்றாக்குறை வந்து விடக் கூடாது என்பதால் கூடுதலாக 30 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். தற்போது வரை புதிய பொறியியல் கல்லூரிகள் எதுவும் வரவில்லை. கலந்தாய்வு துவங்க உள்ள நேரத்தில் தான் புதிய கல்லூரிகள் வருகிறதா என்பது தெரியும்.
அது போல், தனியார் கல்லூரிகள், எவ்வளவு இடங்களை, கலந்தாய்வுக்கு தருகின்றன என்பதும், அப்போது தான் தெரியும். சில கல்லூரிகள், 100 சதவீத இடங்களையும், கலந்தாய்வுக்கு வழங்குகின்றன. இவ்வாறு ராஜாராம் தெரிவித்தார். பிளஸ் 2 படிப்பை முடித்தவர்கள் பி.இ., படிக்க விரும்பினால், கலந்தாய்வு மூலம் அவர்கள் விரும்பும் கல்லூரிகள், அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இது கலந்தாய்வு அல்லது "கவுன்சிலிங்" என அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment