புதிய வழிகாட்டுதல்கள் எப்போது வெளியிடப்படும் என பொறியியல் கல்லூரிகளும், கல்வி அமைப்புகளும் காத்திருக்கும் நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு ((யுஜிசி) வரும் வியாழக்கிழமை (மார்ச் 13) அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில், புதிய வழிகாட்டுதல்களை அதிகாரப் பூர்வமாக வெளியிடுவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐசிடிஇ அதிகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், ஏஐசிடிஇ சட்டம் 1987 பிரிவு 2 (ஹெச்)-இன் படி, ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என்ற வரையறைக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரிகள் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழ்தான் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை யுஜிசி தயாரித்து, கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அதற்கு ஒப்புதலையும் அளித்தது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உடனடியாக யுஜிசி அனுப்பியது. இதற்கிடையே, இழந்த அதிகாரத்தை மீண்டும் பெற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தீவிர முயற்சி மேற்கொண்டுவந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் யுஜிசி அனுப்பிய வழிகாட்டுதலை கண்டுகொள்ளாமல் இருந்துவந்தது.
இதனால், ஏஐசிடிஇ-க்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் வகையில் "ஏஐசிடிஇ சட்டம் 1987'-ல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த காலதாமதம் காரணமாக, புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதிலும், புதிய பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி வழங்குவதிலும், கல்லூரிகளுக்கு அனுமதி நீட்டிப்பு வழங்குவதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அவசரச் சட்டம் என்பது அமைச்சரவையில் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால், நாடாளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டநிலையில், இனி எந்தவித தீர்மானத்தையோ, அவசரச் சட்டத்தையோ மத்திய அரசு கொண்டுவர முடியாது.
இதனைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவ யுஜிசி அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏற்றார்போல் வரும் 13-ஆம் தேதி அவசரக் கூட்டத்தை யுஜிசி கூட்டியுள்ளது.
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் கூறியது:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை யுஜிசி தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக எந்தவித தகவலையும் இதுவரை மத்திய அரசு யுஜிசி-க்கு தெரிவிக்கவில்லை.
அதே நேரம், பொறியியல் கல்லூரிகளில் 2014-15 கலவியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு வரும் 13-மó தேதி அவசரக் கூட்டத்தை தில்லியில் கூட்டியுள்ளது. இதில் புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பான உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment