ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கும் அரசாணையின் பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக அரசாணை எண் 181-ஐ 2011-இல் மாநில அரசு பிறப்பித்தது. அந்த அரசாணையில், தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர். எனினும், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள், தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆகியவை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, ஆசிரியர் தேர்வு வாரியம்தான் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதிச் சான்றிதழை வழங்குகிறது. பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்க முடியாது என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி மதிப்பெண்ணை தளர்த்தியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த தேர்வில் மதிப்பெண்ணை தளர்த்தவில்லை. இதன் காரணமாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆசிரியர் பணியிடங்களில் 47 சதவீதம் பின்னடைவுப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. ஓராண்டுக்கும் மேலாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.
அரசாணையில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் தளர்வுக்கான வாய்ப்பு குறித்த சரியான புரிதல் இல்லாததாலேயே இந்த காலியிடங்கள் உருவாகியுள்ளன.
சி.பி.எஸ்.இ. அமைப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி மதிப்பெண் சான்றிதழை வழங்குகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிகள், தில்லி அரசு பள்ளிகள் ஆகியவை இந்த் தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்துகின்றன.
தகுதி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவீத மதிப்பெண்ணை இந்த அமைப்புகள் தளர்த்தியுள்ளன. இதையடுத்து, 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கும் தகுதிச் சான்றிதழை சி.பி.எஸ்.இ. வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி நிர்வாகங்களுக்குப் பதிலாக ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்துதான் ஆசிரியர் தேர்வு மற்றும் பணி நியமனத்தைச் செய்கின்றன. ஆனால், தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்குவது குறித்து இவை பரிசீலிக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிலாவது மதிப்பெண் தளர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment